இராமநாதபுரம் மாவட்டத்தின் மீன் வளத்தை முற்றிலும் அழிக்கும் வெளியூர் முகவரி படகுகளை வெளியேற்றக்கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மண்டபம் மீனவர்கள் உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடல் பகுதியான கோயில்வாடி கடற்கரையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்கச்சிமடம் , பாம்பன் விசைப்படகு மீனவர்கள் தங்கு தளம் அமைத்து வாரம் 3 முறை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மீன் துறை அதிகாரிகளின் உடந்தையுடன் கடல் வளத்தை அழிக்கும் மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த மண்டபம் மீனவர் நலச் சங்கங்கள் அரசை வலியுறுத்தின.
இந்நிலையில் இரு தரப்பினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு இருக்க ராமநாதபுரத்தில் கடந்த வாரம் மீன்வளத் துறை, காவல்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். சமரச பேச்சு வார்த்தை துவங்க இருந்த நிலையில் இரு தரப்பு மீனவர்கள் இடையே வாக்குவாதம் நிலவியதைபடுத்து பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. சமரச பேச்சு வார்த்தைக்கு நேற்று மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. உண்ணாவிரதத்தை விலக்கி கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் தாசில்தார் பொன்.கார்த்திகேயன், ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சமரசம் பேசினர். ஆனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடத்த பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளதால் விலக்கி கொள்ள மறுத்தனர். இதையடுத்து மண்டபம் அனைத்து மீனவர் நலச்சங்கங்கள், வர்த்தக சங்கம், அனைத்து கட்சி பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்பட 500க்கும் மேற்பட்டோர் மண்டபம் மீனவர்களுக்கு ஆதரவாக கடைகளை அடைத்து உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மண்டபம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.கே.கே.தங்க மரைக்காயர் தலைமை வகித்தார். விசைப்படகு உரிமையாளர் இக்பால் மரைக்காயர், மத்திய சங்கத் தலைவர் சிகேஎம்சி கணபதி, திமுக., நகர் செயலாளர் டி.ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.பாலன், இ. முபாரக் முன்னிலை வகித்தனர்.
மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன்கள் எஸ்.நாகராஜன் (அதிமுக), எம்.நம் ராஜன் ( மண்டபம் ஒன்றிய திமுக மீனவரணி துணை அமைப்பாளர்) மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் என்.பூவேந்திரன் ( ராமநாதபுரம் மாவட்ட திமுக மீனவரணி துணை அமைப்பாளர்), மீனவர் சங்க பிரதிநிதிகள் முன்னாள் கவுன்சிலர் பெரி.பாலசுப்ரமணியன், எம்.ஜாகீர் உசேன், செய்யது சுல்தான், நைஸ் கிங் நாகராஜன், விசைப்படகு உரிமையாளர் எம்.வீரபாண்டியன், இந்திய கம்யூ., பிரமுகர் எஸ்.கருப்பையா, முன்னாள் கவுன்சிலர்கள் சி.செல்வராஜ், முனியசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள் சி. செல்வகுமார், காதர்முகைதீன், செந்தில், காளிமுத்து, அதிமுக., நகர் தலைவர் எம்.சுப்ரமணியன், தமாகா., மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம், பாஜ., நிர்வாகி எம்.கண்ணன், ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகி எம்.ராஜூ, திமுக., பிரதிநிதிகள் சாதிக் பாட்ஷா தண்டல் முருகானந்தம், விசிக ., நகர் செயலாளர் நாகூர் கனி, அமமுக., நகர் செயலாளர் எம்.களஞ்சிய ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு மணி நேர போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் எம்.ஜாகீர் உசேன், எம்.ஜி.விஜயரூபன், மா.மைதீன் கூறுகையில், அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தைக்குச் சென்ற மீனவர் சங்கப் பிரதிநிதிகளை வெளியூர் மீனவர்கள் தாக்க முயன்றது கண்டிக்கத்தக்கது. வெளியூர் படகுகளை கண்டிப்பாக வெளியேற்ற வேண்டும். இரட்டை வலை மீன்பிடிக்கு உடந்தையாக செயல்படும் மீன்வளத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை தடுக்க ரோந்து செல்ல நாட்டுப் படகு கொடுத்து உதவிய மீனவர்களுக்குச் சொந்தமான 10 விசைப்படகுகள் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் படி எங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேறாவிடில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















