மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் முருகன் தலைமையில் தூத்துக்குடி துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி துறைமுக சபை தலைவரிடம் அவர்கள் அளித்துள்ள மனுவில் :- இந்த ஆலையை மூடியதால் தூத்துக்குடியில் வாழும் பல்வேறு துறையை சார்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையானது வருடத்திற்கு 130 சரக்கு கப்பல்கள் மற்றும் சுமார் 9000 சரக்கு பெட்டகங்கள் மூலமாக 30 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு வந்துள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி துறைமுகம் சரக்கு கையாளும் இலக்கை ஆண்டுதோறும் அடைந்துள்ளது என்பதை தாங்கள் நன்கு அறிந்ததே. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் கப்பல் நிறுவனங்கள், கப்பல் முகவர்கள், சுங்க சரக்குகளை கையாளும் முகவர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு கையாளும் நிறுவனங்கள், சரக்கு தர ஆய்வு நிறுவனங்கள், எடைமேடை நிறுவனங்கள், சரக்கு கிடங்கு நிறுவனங்கள் மற்றும் இதனை சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துறையைச்சார்ந்த டிப்பர் லாரி மற்றும் கனரக வாகன ஒட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமின்றி வாகன பட்டறை தொழிலாளர்களும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்களும், பெட்ரோல் டீசல் விற்பனையாளர்களும் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களும் பாதிக்கபட்டுள்ளனர், இது மட்டுமின்றி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகமும் வெகுவாக பாதிக்கப்பட்டு மிக பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த 22 வருடங்களாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மிக சீரான முறையில் வருடத்திற்கு 30 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு வந்த நிலையில், தற்போது தூத்துக்குடியில் இயங்கும் நிறுவனங்களால் இந்த இழப்பை ஈடு செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. 2018-19 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான தூத்துக்குடி துறைமுகத்தில் கையாளப்பட்ட உலர் சரக்கு விகிதம் கடந்த ஆண்டு கையாளப்பட்ட சரக்கு விகிதத்தை விட குறைந்துள்ளது இதற்கு ஸ்டெர்லைட் ஆலை. இயங்காததும் பிரதான காரணமாகும், இது துறைமுகம் சார்ந்த வர்த்தகத்தில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது சராசரியாக 1000 டிப்பர் லாரிகள், மாதத்திற்கு 20 க்கும் மேற்பட்ட நாட்கள் சரக்குகள் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் தவிக்கிறார்கள்.
பல்வேறு சரக்கு கையாளும் நிறுவனங்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நம்பி அதிக முதலீட்டில் நிறுவிய பல சரக்கு கையாளும் இயந்திரங்கள், தற்போது இயக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் தாக்கத்தால் தூத்துக்குடியிலுள்ள பல சார்பு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்துள்ளனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், பல ஒப்பந்த உரிமையாளர்களின் முதலீடு ஸ்டெர்லைட் ஆலை மூடலால் முடங்கியுள்ளது. இது மேலும் பல ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் இணைந்து பனியாற்றும் சேவை வழங்குவோர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியின் பொருளாதார நிலை 25 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆலையின் செயல் முறையில் எவ்வித குறையுமில்லை என்பது 22 ஆண்டுகளாக அதனோடு நேரடி தொடர்பில் இருக்கும் எங்களுடைய தாழ்மையான கருத்து. தவறான வதந்திகளால் தொடங்கப்பட்ட, ஆலைக்கு எதிரான போராட்டம் இயங்கிக் கொண்டிருந்த ஆலையை மூடியது மட்டுமல்லாமல் அதனை சார்ந்த 80,000 மக்களின் வாழ்வாதாராத்தை முற்றிலும் முடக்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தடை விதித்து 8 மாதங்கள் ஆன நிலையில் தொழிற்துறையை சார்ந்த பல தரப்பட்ட மக்கள் செய்வதறியாது நிற்கதியாக நிற்கிறோம்
மேலும், வேதாந்தா நிறுவனம் சார்பில் கூறப்பட்ட உண்மைகளை உறுதிபடுத்தும் விதமாக, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த சிறப்பு குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தி வழங்கிய இறுதி அறிக்கையில் ஆலையை மீண்டும் இயக்க பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று உச்ச நீதி மன்றமும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவை ஏற்று, ஆலை இயங்குவதற்கான இசைவானையை வழங்கும் படி பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்று ஆலையை திறக்க வலியுறுத்தி 23.01.2019 அன்று தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம், தூத்துக்குடி சிட்டி லாரி புரோக்கர்ஸ் ஏஜென்ட்ஸ் அசோஸியேஷன், தூத்துக்குடி ஸ்டீவ்டோர்ஸ் அசோஸியேஷன் ஆகிய நாங்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துளோம். ஆலையை இயக்க உச்சநீதி மன்றம் பரிந்துரை செய்த பின்பும், அதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடைமுறை படுத்தப்படாத பட்சத்தில் துறைமுக உபயோகிப்பாளர்களாகிய நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவுள்ளோம் என்பதை இந்த கோரிக்கை மனுவின் மூலமாக துறைமுக தலைவருக்கு தெரிவித்து கொள்கிறோம்.
எங்களின் இந்த நிலையை மத்திய மற்றும் மாநில அரசுகளின் பார்வைக்கு கொண்டு சென்று , ஆலையை உடனடியாக திறக்க பரிந்துரை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்” என மனுவில் கூறியுள்ளனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









