இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
இது தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், இலங்கையின் கொழும்பு, தெஹிவளை, நெகம்போ மற்றும் வட கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு, நீர்கொழும்பு பல இடங்களில் தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் நிகழ்த்தப்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் மனிதகுலம் மன்னிக்காத மாபாதகச் செயலாகும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இதனை வன்மையாக கண்டிக்கிறது.
சகோதர சமுதாயமான கிறிஸ்தவ சமூகம் புனித நாளாக கடைபிடித்து வரும் ஈஸ்டர் தினத்தன்று இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது திட்டமிடப்பட்ட- ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத செயலாகவே கருத முடிகிறது. இது இலங்கை மக்கள் மீதான தாக்குதல் அல்ல ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வெறிச் செயலாகவே இதனைப் பார்க்க வேண்டும்.இந்த கொடூர தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியிருப்பது மனதை பதைபதைக்கச் செய்கிறது.
2009ம் ஆண்டுவரை நடந்த சிவில் யுத்தத்தில் கந்தகக் காற்றை சுவாசித்த என் தொப்புள் கொடி உறவுகளான இலங்கை மக்கள் அதன் பிறகு அமைதிக் காற்றைசுவாசித்து வந்த வேளையில் மீண்டும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டிருப்பதை கவலையுடன் அவதானிக்க வேண்டியிருக்கிறது. பயங்கரவாதம் மத,இன,மொழி அரசியல் என எந்த வடிவத்தில் வந்தாலும் அது வீழ்த்தப்பட வேண்டியதே!
குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்கள்.அவர்களை கண்டறிந்து அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.அது பொதுவெளியில் நிறைவேற்றப்பட வேண்டும்.இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பின்னணியிலுள்ள சக்திகள் உலகத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும்.விசாரணை அமைப்புகள் உண்மையான குற்றவாளிகளை நெருங்குவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
துயரமான இத்தருணத்தில் இலங்கை மக்கள் வதந்திகளுக்கு முகம் கொடுக்காமல் அமைதி காத்து,பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
குண்டு வெடிப்பில் தனது இரத்த உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ஆறுதலையும்,ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களின் இதயம் அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









