தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளர் இ.முஹம்மது வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது.!
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த களக்காட்டில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்சந்தித்து தங்களின் பகுதியில் உள்ள ரேசன்கடை தொடர்பான மனுவை கொடுத்துள்ளனர்.
அந்த மனுவை வாங்க மறுத்த ராஜேந்திரபாலாஜி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே! பின் எதற்கு எங்களிடம் கொண்டு வந்து மனுவை தருகின்றீர்கள்? 6 சதவிகித வாக்குகளை வைத்து நாக்கு வழிக்கவா முடியும்? என்று பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார்.
தமிழக அரசின் அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சரின் நாகரீகமற்ற பேச்சு இஸ்லாமியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவினர் இதுவரைக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அறியாமையை நினைத்து கவலை கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியா? லேடியா? என்று கேட்டு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனித்து நின்ற போது, மோடியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக அதிகபட்சமான இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களித்து அதன் காரணமாக அதிமுக பெரும்பான்மை இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அதுபோல சென்ற 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கணிசமான இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்றே அதிமுக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்தது. இந்த வரலாறையெல்லாம் மறந்து விட்டுப் பேசுகின்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
என்றைக்கு அதிமுக பாஜகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததோ அன்றிலிருந்தே இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர்.
அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்கள் வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று பிரித்து செல்வதில்லை, அதுபோல அரசாங்கம் பிறப்பிக்கும் உத்தரவுகளை வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கிற அரசியல் பாலபாடம் கூடத் தெரியாதவர் இந்த ராஜேந்திரபாலாஜி என்பது உறுதியாகின்றது.
மோடி எங்களின் டாடி என்று சொல்லி அமைச்சராக மட்டுமல்ல! அரசியலுக்குக் கூட தகுதியில்லாத அரிச்சுவடி தெரியாத ராஜேந்திரபாலாஜியின் தொடர் உளறல்களை மக்கள் அறிவார்கள்.
பாஜகவோடு உறவை வைத்ததால் இழந்து விட்ட இஸ்லாமியர்களின் ஆதரவை மீண்டும் பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக தலைமையில் உள்ளவர்கள் நினைக்கும் நிலையில் ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் இழிவுபடுத்தியுள்ளதோடு மட்டுமின்றி பல சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி., அதிமுகவை சவக்குழிக்கு அனுப்பும் வேலையைச் செய்து வருகின்றார்.
சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்ற ராஜேந்திரபாலாஜியின் பேச்சு அனைத்து தரப்பு மக்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விறுப்பு வெறுப்பின்றி செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்து பதவியேற்று அரசியலமைப்பு சாசன சட்டத்திற்கு எதிராக சிறுபிள்ளைத்தனமாக பேசியுள்ள அமைச்சரின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகவன்மையாகக் கண்டிக்கின்றது. வடநாட்டு பாஜக அமைச்சர் போல தன்னை நினைத்துக் கொண்டு செயல்படும் ராஜேந்திரபாலாஜியை அதிமுகவின் தலைமை கட்டுப்பட்டுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றது. என தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









