மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – மாநில அளவிலான “நல்லாசிரியர்” விருதைப் பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அவர்களுக்கு, இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, சென்னை நகரில் நடைபெற்ற மாநில விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கையாலும், ஆனந்தகுமார் அவர்களுக்கு “மாநில நல்லாசிரியர் விருது” வழங்கப்பட்டது. கல்வி சேவையில் ஆற்றிய சிறப்பான பணி, மாணவர்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவை இந்த விருதுக்கு காரணமாகும்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
விழாவில் உரையாற்றிய தலைமை ஆசிரியர், “ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனந்தகுமார் போன்றவர்கள் கல்வியைத் தாண்டியும் மாணவர்களின் நலனில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று பாராட்டினார்.
மாணவிகள், பெற்றோர், மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர், ஆனந்தகுமார் அவர்களின் கல்விசார் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு, பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவிகளின் மனஉறுதியை மேம்படுத்துவதற்கும், சமூகத்தில் ஆசிரியர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறப்பாக அமைந்தது.