பழனியில் மாற்றுத்திறனாளி மாணவி சுமையா பானு, தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..

பழனியில் மாற்றுத்திறனாளி மாணவி தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானு ஒரு கண் பார்வை கொண்டவர், மேலும் கை விரல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு அமையப்பெற்றவர். தன்னம்பிக்கை மிக்க மாணவியான சுமையா பானு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது உதவியாளர் இன்றி தானே தேர்வை எழுதினார். தேர்வில் வெற்றி பெற்று 540 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் 96, ஆங்கிலம் 59, புள்ளியல் 98, வரலாறு 94 , பொருளியல் 99, அரசியல் அறிவியல் 94 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உதவியைப் பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வையும் எழுதியுள்ளார் சுமையா பானு. தற்போது வெளிவந்த தேர்வு முடிவில் சட்டப் பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்று மாணவி சுமையா பானு தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு பள்ளியில் பயின்ற சுமையா பானுவிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறன் குழந்தைகள் பயிற்சி ஆசிரியர் சுகப்பிரியா தனிக்கவனம் செலுத்தி அளித்த பயிற்சியின் காரணமாக சுமையா பானு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானுவிற்கு தேர்வுக்கு சென்று வர போக்குவரத்து செலவு, தேர்வுக்கு தயாராகும் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உயரிய அரசு பதவிக்கு செல்வேன் என மாணவி சுமையா பானு தெரிவித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்று சாதித்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவி சுமையா பானுவிற்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் படிப்பு செலவுக்கான உதவிகளை வழங்க பழனியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். உடலில் உள்ள குறைகளை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் போராடி தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பழநி- ரியாஸ்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!