சலுகையை விரும்பாத மனித இனமே இருக்க முடியாது. நமக்கு பாரமாக தெரியும் விசயத்திற்கு ஏதாவது எளிய வழி கிடைக்கும் பொழுது மனம் குதூகலத்தில் துள்ளி குதிக்கும். இதுதான் மனித இயல்பு, ஆனால் இது இந்த உலக வாழ்கையில் கிடைக்கும, சந்தோசம். இதே சலுகை நமக்கு மறுமை உலகில் கிடைக்கும் என்றால், அது எவ்வளவு பெரிய பாக்கியமாகும், அதுதான் நமக்கு இறைவன் அளித்துள்ள “ரமளான்” மாதம். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் இந்த ஒரு புனித மாதத்தில் செய்யும் நற்காரியங்கள் மூலமாகவும், மனமுருகி இறைவனை பிரார்திப்பது மூலமாகவும் மன்னிப்பாக சலுகைகள் வழங்கப்படுகிறது. கீழே உள்ள எளிதான இறைவசனமும்ழ நபி மொழியும் ரமளான் மாத த்தின் சிறப்பை விளக்கும்.
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)” – (அல்குர்ஆன்: 2:185)
ரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஹதீஸ் – 1
‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 761)
சிறப்புகள்: 1. எழுநூறு மடங்குக்கும் அதிகமான நன்மை 2. அல்லாஹ்வின் நேரடி கூலி 3. கேடயம் 4. கஸ்தூரியை விட சிறந்த வாய் வாசம்.
நன்மையான காரியங்களுக்கு எழுநூறு மடங்கு கூலியை அல்லாஹ் தருகிறான், ஆனால் நோன்பிற்கு அதை விடவும் அதிகமாக தருகிறான். நோன்பு நரகத்திலிருந்து நம்மை காக்கும் கேடயமாகும். நோன்பு பிடித்திருக்கும் போது இயல்பாகவே ஏற்படும் வாய் வாசம் கூட அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட சிறந்ததாகும்.
ஹதீஸ் – 2
அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நற்செயல்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நோன்பிருப்பாயாக, அதற்கு நிகரானது எதுவுமில்லை’ என்றார்கள். மீண்டும் அவர்களிடம் சென்றேன்;, அவர்கள் ‘நோன்பிருப்பாயாக!’ என்று சொன்னார்கள். (நூல்கள்: அஹ்மது, நஸயீ, ஹாக்கிம்)
சிறப்புகள்: 5. சொர்க்கத்திற்கு உத்திரவாதம்.
சொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்களால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது தான் நோன்பு.
ஹதீஸ் – 3
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)
சிறப்புகள்: 6. மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு.
குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமளான் என்ற இறுக்கமான தொடர்பு இருப்பதால் நோன்பும் குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக சிபாரிசு செய்கிறது.
ஹதீஸ் – 4
யார் அல்லாஹ்வின் பாதையில் சென்றிருக்கும் போது ஒரு நாள் நோன்பு வைக்கிறாரோ அந்த ஒரு நாள் நோன்பிற்குப் பகரமாக அல்லாஹ் அந்த அடியானின் முகத்தை எழுபது வருட காலம் நரக நெருப்பை விட்டு தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம் 2122, நஸயி 2248, ரியாலுஸ்ஸாலிஹீன் 1218)
சிறப்புகள்: 7. நரகத்திலிருந்து பாதுகாப்பு.
நரக நெருப்பை விட்டும் தூரமாக்கக்கூடியது நோன்பு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
ஹதீஸ் – 5
நீங்கள் மிம்பருக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது ‘ஆமீன்’ என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் ‘ஆமீன்’ என்றனர்.
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள், நான் ஆமீன் என்றேன். ‘உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ‘தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)
சிறப்புகள்: 8. பாவமன்னிப்புக்கு உத்திரவாதம்.
நமது பாவங்கள் மன்னிக்கப்பட சிறந்த வசந்த காலம் ரமளான் நோன்பு. பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய வகையில் நமது செயல்பாடுகளை அம்மாதத்தில் அமைத்துக் கொள்ளாதவர் நஷ்டவாளிகளே!
ஹதீஸ் – 6
சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)
சிறப்புகள்: 9. சொர்க்கம் பரிசு 10. விஷேசமான சிறப்பு வழி.
நோன்பாளிகள் சொர்க்கம் செல்வார்கள் என்பதையும் அவர்கள் விஷேசமான வழியில் நுழைவார்கள் என்பதையும் அவ்வாயிலில் நுழைபவர்களுக்கு தாகம் ஏற்படாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
ஹதீஸ் – 7
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)
சிறப்புகள்: 11. இறைவனின் சந்திப்பு. 12. அதனால் மகிழ்ச்சி.
நோன்பாளிகள் இறைவனை சந்திப்பார்கள் என்பதையும் அப்போது அவர்கள் மகிழ்வார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவாக்குகிறது.
முடிவுரை:-
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











