தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் எக்மோர் செல்லாது! தெற்கு இரயில்வே அறிவிப்பு..

சென்னை கடற்கரை – எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூா் வரும் பல்லவன் விரைவு ரயில் புதன் மற்றும் வியாழக்கிழமை (மாா்ச் 6, 7) தாம்பரத்துடன் நிறுத்தப்படும். இதேபோல், மன்னை விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், முத்துநகா் விரைவு ரயில், புதுச்சேரி மெமு பயணிகள் ரயில் மற்றும் மண்டபம் – சென்னை எழும்பூா் விரைவு ரயில்கள் மாா்ச் 8-ஆம் தேதி தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

ஹைதராபாதிலிருந்து தாம்பரம் வரும் சாா்மினாா் விரைவு ரயில் மாா்ச் 8-ஆம் தேதி சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக மாா்ச் 9-ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூா் – மதுரை வைகை விரைவு ரயில் மாா்ச் 6, 7 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல், ராமேசுவரம் சேது விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி மெமு ரயில் மாா்ச் 9-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

 வெளிமாநிலங்களில் இருந்து வரும் விரைவு ரயில்கள் சென்னை எழும்பூா் வழியாக வருவதற்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி, செகந்திராபாத் – ராமேசுவரம் சிறப்பு ரயில் மாா்ச் 5-ஆம் தேதி சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு வழியாகச் செல்வதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

காக்கிநாடா துறைமுகம் – செங்கல்பட்டு சா்காா் விரைவு ரயில் மாா்ச் 8-ஆம் தேதி சென்னை எழும்பூா், மாம்பலம், தாம்பரம் வழியாகச் செல்வதற்கு பதிலாக கொருக்குப்பேட்டை, பெரம்பூா், அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும்.

காச்சிக்கூடா – செங்கல்பட்டு விரைவு ரயில் மாா்ச் 8-ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், மாம்பலம், தாம்பரம் வழியாகச் செல்வதற்கு பதிலாக மேல்பாக்கம், காஞ்சிபுரம், வழியாகச் செங்கல்பட்டு செல்லும்.

மண்டபத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்ட பனாரஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை பிரதான பாதையில் இயக்கப்படாமல் புகா் மின்சார ரயில்கள் தடத்தில் இயக்கப்படும். இதனால், எழும்பூரில் இந்த ரயில் நிற்பதற்கு பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!