டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்! -தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஊரடங்கு காரணமாக சிக்கிக்கொண்ட தமிழர்கள், அதேபோல் டெல்லியில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனையில் தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் தமிழகம் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் தவித்து வரும் அவர்களை தமிழகம் அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தமிழக அரசு இந்த விசயத்தில் தொடர் மெத்தனப் போக்கை கையாண்டு வருகின்றது.
இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் முஸ்தபா என்பவர் தனக்கு இருக்கும் நீரிழிவு நோய்க்கு போதிய மருத்துவம் கிடைக்கப் பெறாமல் உயிரிழந்த சோகம் நடந்தேறியுள்ளது.
பொறியாளர் முஸ்தபாவுக்கு இருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நோய் தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்ட நிலையில், போதிய அடிப்படை வசதியில்லாத டெல்லி சுல்தான்பூரி முகாமில் தங்கவைப்பப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு நீரிழிவு நோய் அதிகரித்த நிலையில் உரிய மருத்துவம் கிடைக்கப்பெறாமல் அவர் மரணமடைந்துள்ளார்.
கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீண்டு, நோய் தொற்று இல்லாத நிலையில், போதிய மருத்துவம் கிடைக்கப் பெறாமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையைத் தருகின்றது.
பொறியாளர் முஸ்தபாவை போன்று உடல்நலக் குறைபாட்டுடன் ஏராளமானோர் டெல்லியில் பரிதவித்து வருகின்றனர். அவர்களை காப்பாற்ற வேண்டிய முழு பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. ஆகவே தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
டெல்லி மாநில அரசு தங்கள் மாநிலம் சார்ந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக முனைப்புக் காட்டும் நேரத்தில், பிற மாநிலத்தவர்கள் மீதான அவர்களின் அணுகுமுறை திருப்திகரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருவதால், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்களையும் தமிழகம் அழைத்து வந்து அவர்களை தமிழக அரசின் சார்பில் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்திடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் டெல்லியில் உள்ள தத்தமது மாநிலத்தவர்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து அவர்கள் மூலமாக உதவிகள் செய்து வருகின்றன. அதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சிறப்பு அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து, அவர்களை பத்திரமாக தமிழகம் கொண்டு வந்து சேர்க்கும் முழு பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.
வாரணாசியில் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டு அங்கு பரிதவித்த பக்தர்களை தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் மீட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதுபோன்று டெல்லி, உ.பி. மற்றும் ம.பியில் பரிதவிக்கும் தப்லீக் ஜமாத்தினர் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் தமிழக அரசு சிறப்பு கவனமெடுத்து அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









