சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம்..

சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள்,பொதுச் செயலாளர்கள் கூட்டம்..

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் கூட்டம் சேலம் ஏற்காட்டில் இன்று (மே.14) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின்  மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே, அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் தெகலான் பாகவி, முஹம்மது பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மேலும் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர்கள் அஹமது நவவி, நிஜாம் முஹைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் ரத்தினம், அபூபக்கர் சித்தீக்,  ஏ.கே.கரீம்,  ராஜா உசேன், நஜ்மா பேகம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள்  உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்தும் மீளாய்வு நடைபெற்றது. ஜனநாயகத்தை காக்கும் வகையில்  தமிழக முழுவதும் பரவலாக தங்களது வாக்குரிமை நிறைவேற்றிய வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முஹம்மது முபாரக் அவர்களுக்கு  வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜூன் 04 அன்று வெளியாகும் தேர்தல் முடிவில் 40 தொகுதிகளிலும் அஇஅதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜூன் 21 எஸ்டிபிஐ  கட்சியின் துவக்க தினத்தை மக்கள் நல திட்டங்களோடு மாநில முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மோடியின் வெறுப்பு பிரச்சார பேச்சுக்களுக்கு கண்டனம்: ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமருக்குப் பொருந்தாத வெறுப்பு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடிக்கும், அதனை கட்டுப்படுத்தாத இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கும் இந்த செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிடும் கீழ்த்தரமான நிலைக்கு பிரதமர் இறங்கியிருப்பது நாட்டிற்கு அவமானம். தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்பு பேச்சுகளை, மதரீதியான விழிப்புணர்வை தூண்டும் கருத்துக்களை தடுத்து நிறுத்தி, தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி விவகாரத்தில் மௌனம் சாதிக்கின்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயலற்றத் தன்மையை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான ஆரோக்கியமற்ற வெறுப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இந்த செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது. எஸ்டிபிஐ கட்சியின் மக்கள் அரசியலின் 16ஆம் ஆண்டு துவக்க தினம்: பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்கிற கொள்கை முழக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் எழுச்சிக்காக போராடிவரும் எஸ்டிபிஐ கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. கட்சி கொடி ஏற்ற நிகழ்ச்சிகள், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், ஆதரவற்றோருக்கான நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல், ரத்ததான முகாம் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளுடன் கட்சி துவக்க தினத்தை கொண்டாடவும் தீர்மானிக்கப்பட்டது. போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டால் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழக முழுவதும் பரவலாக போதைப் பொருட்கள் பயன்பாடும் அது தொடர்பான

குற்றச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறிவருவது கண்கூடாகத் தெரிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றுதல் என்கிற நடவடிக்கையை தாண்டி, அதன் பயன்பாடு, அதன் மூலம் நடைபெறும் குற்றச் செயல்களை தடுத்தல், அதன் காரணமாக குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்தல் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாகவே போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை அரசு தடுக்க முடியும். ஆகவே, போதையின் பிடியிலிருந்து தமிழக இளைஞர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் புழக்கத்தில் மிக முக்கிய பங்கை டாஸ்மாக் வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆகவே எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திவரும் மதுவிலக்கை அமல்படுத்தி, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஒரு பொறுப்புள்ள அரசாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் பரவலாக நிகழும் மின்வெட்டு பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திட வேண்டும்: கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பரவலாக ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மேலும்,  குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் சாதனங்களை இயக்க முடியாத சூழலும் நிலவுகின்றது. ஆகவே தமிழக அரசு இதனை கவனத்தில்கொண்டு  போர்க்கால அடிப்படையில் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரிசெய்திட வேண்டும் என இந்த செயற்குழு வலியுறுத்துகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்: தமிழகத்தில் பரவலாக குடிநீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் காரணமாக உயர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும்  குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆகவே குடிநீர் பிரச்சினையை சரிசெய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளில்  தண்ணீர் இருப்பை அதிகரிக்க மராமத்துப் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.


Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!