பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை -500க்கும் மேற்பட்டோர் கைது!

இராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், மக்களிடையே  மதவெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம், உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது. ஆகவே, தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரதமர் மோடி பதவி விலகக் கோரியும், சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இன்று (ஏப்.27) இந்திய தேர்தல் ஆணைய அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், சென்னை வடக்கு மண்டலத் தலைவருமான முகம்மது ரஷீத் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக் மற்றும் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி முன்பிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், “கடந்த ஏப்ரல் 21, 2024  அன்று, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், இஸ்லாமியர்களை சட்டவிரோத  ஊடுருவல்காரர்கள் என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் அவர்களுக்கு, இந்துக்களின் புனித தாலி (தங்கம்) உள்ளிட்ட சொத்துக்களை பறித்துக் கொடுத்து விடுவார்கள் என்று மதரீதியாக மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையில் மிக மோசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேர்தல் அரசியல் நலனுக்காக தான் வகிக்கும் பொறுப்பை மறந்து, சிறுபான்மை முஸ்லிம்களின் மீது வெறுப்பை விதைத்து, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் திரு.மோடியின் பிரச்சாரம் முழுக்க முழுக்க அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் மற்றும் நடத்தை விதிகளுக்கு (MCC) முற்றிலும் எதிரானது. எந்தவொரு கட்சியோ, வேட்பாளரோ சமூகத்தில் உள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் அல்லது பரஸ்பர வெறுப்பை உருவாக்குகின்ற அல்லது வெவ்வேறு சாதிகள், மத அல்லது மொழியியல் பிரிவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்ற எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன. பிரிவு 123 (3ஏ)இன்படி தேர்தல் பிரச்சாரத்தின் போது குடிமக்களிடையே பகை அல்லது வெறுப்பு உணர்வைத் தூண்ட ஒரு அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக செய்யும் எந்தவொரு முயற்சியும் தேர்தல் முறைகேடாகவே கருதப்படும். மேலும், ஆர்.பி. சட்ட விதிகளின் மூலம் தேர்தல் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட எவரும் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட சாத்தியமுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றது. எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கை மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பதிலாக பாஜக தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தது. ஆகவே, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், மதச்சார்பற்ற அரசமைப்புக் கட்டமைப்பின் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் மதரீதியாக  பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.பி. சட்ட விதிகளின் மூலம் உடனடியாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி தான் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!