இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மதம் மாறிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவர்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ மதம் மாறும்போது அவர்கள் பெற்றுவந்த இடஒதுக்கீட்டை மறுப்பது அல்லது அவர்களை பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் அவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது என்பது ஏற்புடையதல்ல. நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும். முஸ்லிம்களின் வாழ்நிலை குறித்து அறிய இந்திய அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழு, இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்நிலையானது பட்டியலின சமூகத்தைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக புள்ளிவிவரங்களுடன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. இதனை மேம்படுத்த தேசிய அளவில் சிறப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும், முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டு வழங்கிட வேண்டும் என ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை பரிந்துரை செய்திருந்தது. இப்படி முஸ்லிம்களின் பொருளாதார வாழ்நிலை மோசமாக இருக்கும் சூழலில், நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிமாக மாறியவர்களுக்கு அவர்கள் முஸ்லிமாக மதம் மாறியதற்காக இடஒதுக்கீட்டை மறுப்பது அச்சமூகத்தை மென்மேலும் மோசமாக்கும். மதம் மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் முறையான உத்தரவு இல்லாத காரணத்தால், மதம் மாறிய யாருக்கும் சாதி சான்றிதழ் கூட பெறமுடியாத சூழல் நிலவுகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிமாக மதம் மாறினால், அவர் ஏற்கனவே பெற்றுவந்த இடஒதுக்கீட்டை பெற முடியாமலும், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவிலும் (BCM) இடஒதுக்கீடு பெற முடியாமலும், பொதுப்பிரிவினருக்கான இடங்களில் போட்டியிடும் சூழல் உள்ளது. சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் அவர்களால் கல்வி, வேலைவாய்ப்புகளில் கூட மற்றவர்களைப் போன்று இடஒதுக்கீட்டின் கீழ் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்களின் வாழ்க்கை சூன்யமாகவே உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி (TNPSC) போன்ற போட்டி தேர்வு நடத்தும் ஆணையங்கள், மதம் மாறிய இஸ்லாமியர் என்று தெரிய வந்தால் அவர்கள் பட்டியல் பிரிவினராக இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக இருந்தாலும் அவர்களின் இட ஒதுக்கீட்டை பறித்து இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் அதாவது பொதுப் பிரிவினர் என்ற பட்டியலில் சேர்த்து வெளிப்படையாக சமூகநீதிக்கு எதிராக செயல்படுகின்றது. ஆகவே, தமிழக அரசு மதம் மாறிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு அவர்கள் எந்த மதத்திலிருந்து மதம் மாறினாலும் இடஒதுக்கீடு கிடைத்திடும் வகையில், அவர்கள் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களை நீக்கி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









