இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழில்வளாகத்தில் இயங்கி வரும் தனியார் கெம்பிளாஸ்ட் கடலூர் வினைல்ஸ் ரசாயன ஆலையின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள விரிவாக்கத் திட்டம், சுற்றுச்சூழலுக்கும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இத்தகைய விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
ஒன்றிய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களால் ஏற்கெனவே “மிகவும் மாசுபட்ட பகுதி” (Critically Polluted Area) என அறிவிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் இந்த ஆலை விரிவாக்கம் செய்யப்படுவது சுற்றுச்சூழலை மேலும் அழிக்கும் கொடூரமான செயலாகும். கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் இயங்கும் ரசாயனத் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர், காற்று மற்றும் கடல் வளங்கள் கடுமையான மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளன. இதன் விளைவாக, சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் சுவாசக் கோளாறுகள், தோல் நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இலாப நோக்கத்திற்காக மட்டும் இத்தகைய விரிவாக்கங்களை அனுமதிப்பது மக்களின் உயிரைப் பலிகொடுக்கும் சதித்திட்டமாகவே கருதப்படும்.
இந்த ஆலையின் விரிவாக்கத்தால் வெளியேற்றப்படும் நச்சுக் கழிவுகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலத்தடி நீரை மேலும் நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றும். கடல் வளங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைவடையும். மேலும், இப்பகுதியின் விவசாயமும் உள்ளூர் பொருளாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும். சிப்காட் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இத்தொழிற்சாலைகளின் நச்சு விளைவுகளால் தினசரி போராடி வரும் சூழலில், இந்த விரிவாக்கத் திட்டம் மேலும் அவர்களின் ஆரோக்கியத்தை அழிக்கும் ஆயுதமாக மாறும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய தொழில்துறை விரிவாக்கங்களுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்தத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது. பொதுமக்களின் கருத்துகளை மதித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து, இத்திட்டத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு துறை ரீதியாக உத்தரவு பிறப்பித்து, இந்த ரசாயன ஆலை விரிவாக்கத்தை இரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். மக்களின் உயிரும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியவை; இலாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தொழில்முன்னேற்றங்கள் அனுமதிக்கப்படக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


You must be logged in to post a comment.