எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம் சென்னையில் இன்று (டிச.02) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில செயலாளர் ஷபீக் அஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் அமீர் ஹம்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் BLA2, பூத் கமிட்டி BLC மாநாடுகளை சிறப்பாக நடத்திய இராமநாதபுரம், தஞ்சை மண்டலம், கோவை மண்டலம், தென்காசி மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்து நடைபெறவுள்ள மாவட்ட பூத் கமிட்டி மாநாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1.திட்வா புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வேண்டும்.
திட்வா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயப் பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கி அழிந்துள்ளன. ஆகவே, உடனடியாக விரிவான ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள், பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு, நோய்த் தொற்று தடுப்புக்கான சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.
இதேபோல், திட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை நகரில் கனமழையால் தொடர்ந்து ஏற்படும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டி, அறிவியல் ரீதியான விரிவான ஆய்வு நடத்தி, நவீன வடிகால் அமைப்பு உள்ளிட்ட உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது.
2.குடிமக்களின் அந்தரங்கத்தை கண்காணிக்கும் “சஞ்சார் சாத்தி” செயலி நிறுவல் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்.
ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இனி இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய மொபைல் போன்களிலும் “சஞ்சார் சாத்தி” செயலியை கட்டாயமாக முன்னிருப்பாக நிறுவ வேண்டும் என்றும், ஏற்கனவே விற்பனையான கோடிக்கணக்கான போன்களுக்கு மென்பொருள் புதுப்பிப்பு மூலம் இதை திணிக்க வேண்டும் என்றும் மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலி போன்களைத் தடுப்பது, IMEI மோசடியைத் தவிர்ப்பது என்ற பெயரில் கொண்டுவரப்படும் இந்த நடவடிக்கை, உண்மையில் ஒட்டுமொத்த மக்களையும் தொடர்ச்சியாக உளவு பார்க்கும் சர்வாதிகாரத் திட்டமே என்பது தெளிவாகிறது.
இஸ்ரேலிய நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பெகாசஸ் உளவு கண்காணிப்பை இன்னும் நாட்டு மக்கள் மறக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நீதிபதிகள் என யாரையும் விட்டுவைக்காத இந்த அரசு, இப்போது ஒவ்வொரு குடிமகனின் அந்தரங்கத்தையும் கண்காணிக்க அனைவரது போனிலும் தன் கையை வைக்க முனைகிறது. இந்த செயலி அழைப்பு பதிவுகள், செய்திகள், கேமரா, இருப்பிடம் உள்ளிட்ட அதி உயர் அளவு அனுமதிகளைக் கோருகிறது; அதை நீக்கவோ முடக்கவோ முடியாது என்று உத்தரவு கூறுகிறது. இது தனியுரிமை மீதான மிகப் பெரிய தாக்குதலாகும். ஆகவே, இந்த உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.
ஒன்றிய அரசு “பயனர்கள் விரும்பினால் மட்டுமே” என்று சப்பைக் கட்டு கட்டினாலும், உத்தரவு கட்டாய நிறுவலைத்தான் பேசுகிறது. தனியுரிமை என்பது சலுகை அல்ல; அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்த அடிப்படை உரிமை. அதைப் பறிக்கும் எந்த முயற்சியையும் ஜனநாயக சக்திகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதற்கெதிராக வலுவாக குரலெழ வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுக்கிறது.
3. டிட்வா புயல் பாதிப்பு – இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
டிட்வா புயல் மற்றும் அதனால் பெய்த கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களால் அண்டை நாடான இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 410-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 228 பேர் காணாமல் போயுள்ளனர். ஒட்டுமொத்தமாக 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரழிவைச் சந்தித்த இலங்கை மக்கள் உதவியை எதிர்பார்த்துள்ளனர். ஆகவே, இந்திய அரசு உடனடியாக உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்கி, அங்கு துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட வேண்டும்.
4.தமிழகத்தில் நிலவும் கனமழை பாதிப்பு – எஸ்ஐஆர் பணிகளை ரத்து செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளுக்கான காலவரம்பை டிசம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. ஆயினும், தமிழகத்தின் பல மாவட்டங்கள் இன்னமும் பருவமழை, கனமழை, வெள்ளப் பேரிடரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகத் திரும்பவில்லை; பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளையே மீட்டெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, வருவாய்த் துறை, உள்ளாட்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள் இரவு-பகலாகக் களப்பணியாற்றி வருகின்றனர். இவர்களையே வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR)க்காக வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் பணியில் ஈடுபடுத்துவது கடும் பணிச்சுமையை ஏற்படுத்தும். மேலும், மழை வெள்ள பாதிப்பால் பல பகுதிகளில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாலும், மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருப்பதாலும் இப்பணி துல்லியமாகவும் முழுமையாகவும் நடைபெறுவது சிரமமே.
ஆகவே, தற்போதைய இக்கட்டான சூழலில் அவசர அவசரமாக இந்தப் பெரும் பணியைத் திணிக்காமல், தேர்தல் ஆணையம் இத்தீவிரத் திருத்தப் பணியை முழுமையாக ரத்து செய்துவிட்டு, எதிர்வரும் தேர்தல் முடிந்த பின்னர், இயல்பு நிலை திரும்பிய பிறகு அமைதியாகவும் துல்லியமாகவும் நடத்த வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


You must be logged in to post a comment.