வக்பு சொத்துக்களை டிச.04க்குள் உமீத் போர்டலில் உடனடியாகப் பதிவு செய்திடுக!  -எஸ்டிபிஐ மாநில தலைவர் வேண்டுகோள்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; புதிய வக்பு (திருத்த) சட்டம் 2025-ன் படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்பு சொத்துக்களையும் (நிலம், கட்டடம், தோட்டம், கடை, பள்ளிவாசல்கள், தர்கா, கபர்ஸ்தான் இடம், பள்ளிவாசல் நிலம் உள்ளிட்ட அனைத்து வக்பு சொத்துக்கள்) ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ வக்பு சொத்துகள் இணையதளத்தில் (UMEED PORTAL) (https://umeed.minorityaffairs.gov.in/)  கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே வகுப்பு சொத்துக்கள் மாநில வக்பு போர்டில் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டிருந்தாலும் புதிய சட்டத்தின் படி umeed தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இந்தப் பதிவுக்கான இறுதி தேதி டிசம்பர் 4, 2025 (புதன்கிழமை) வரை மட்டுமே என கூறப்படுகிறது. தமிழ்நாடு வக்பு வாரியமும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, வக்பு சொத்துகளின் பராமரிப்பாளர்களாக உள்ள முத்தவல்லிகள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்பிலுள்ள அனைத்து வக்பு சொத்துக்களையும் தவறாமல், உடனடியாகப் பதிவு செய்து, எதிர்கால சந்ததியினருக்காக வக்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மிகுக்குறைந்த நெருக்கடியான காலச்சூழலை கருத்தில் கொண்டு, தங்கள் மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு அதற்கென வழங்கப்படும் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, விரைவாக சமர்ப்பித்து வக்பு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த வக்பு திருத்த சட்டத்தை நாம் உறுதியாக எதிர்த்தாலும், அதற்கான சட்டப் போராட்டங்களை மேற்கொண்டாலும்,  உச்சநீதிமன்றம்  வழங்கி இருக்கும் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை UMEED PORTAL தளத்தில் சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வக்பு சொத்து என்பது இறைவனின் சொத்து. அதைப் பாதுகாப்பது நமது அனைவரது கடமை என்பதை உணர்ந்து விரைவாக செயல்பட வேண்டும். இந்த நடவடிக்கையில் எஸ்டிபிஐ கட்சியின் அந்தந்த பகுதி கிளை நிர்வாகிகளும் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!