ஜனநாயக சக்திகளின் குரல்களை, கோரிக்கைளை எதிர்கொள்வதில் அரசுக்கு ஏன் அச்சம்? -எஸ்டிபிஐ கட்சி கேள்வி..

ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை!
 
ஜனநாயக சக்திகளின் குரல்களை, கோரிக்கைளை எதிர்கொள்வதில் அரசுக்கு ஏன் அச்சம்?- எஸ்டிபிஐ கட்சி கேள்வி..


இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;



இந்தோனேசியாவிலிருந்து தரம் குறைந்த நிலக்கரியை வாங்கி, போலி பில்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மூன்று மடங்கு விலைக்கு விற்று, சுமார் 6000 கோடி ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டது அதானி நிறுவனம். இந்த ஊழல்கள் மீது நடவடிக்கை கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (ஜன.05) அறப்போர் இயக்கம் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி, சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதானி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி நடத்தப்படும் போராட்டத்தால் என்ன மாதிரியான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட போகிறது என்பது தெரியவில்லை. இந்த அனுமதி மறுப்பு கண்டனத்திற்குரியது.

சமீப காலங்களாகவே ஜனநாயக சக்திகளின் போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு, போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என காரணங்களை கூறி, சென்னை காவல்துறை தொடர்ச்சியாக அனுமதி மறுத்து வருகின்றது.  ஜனநாயக சக்திகளின் எதிர் குரல்களை, கோரிக்கைளை எதிர்கொள்ள இந்த அரசுக்கு ஏன் அச்சம்? என்கிற கேள்வி எழுகிறது.

சென்னையை பொறுத்தவரை ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வமான போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் ஆகியவற்றிற்கு அருகில் மட்டுமே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாத இந்த பகுதியில் கூட போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து வருகின்றது சென்னை காவல்துறை. அதுவும் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கோரிக்கையை இழுத்தடித்து, கடைசி நேரம் வரை காத்திருக்க வைத்து இறுதியில் அனுமதி மறுக்கப்படுகிறது. பெரும்பாலான போராட்டங்கள் தடையை மீறியே நடைபெற்று வருகின்றன. அதற்காக வழக்குகளும் போடப்படுகின்றன.

சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜனநாய ரீதியாக அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு தொடர்ந்து காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சியான சிபிஐ(எம்) மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் கூறுவதுபோல தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு மினி எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

ஜனநாயக முறையில் தங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கு, கூட்டம் கூட்டவும், பேசவும், போராட்டங்கள் நடத்தவும் அரசியலமைப்பு சட்டம் அனுமதி அளித்துள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் காவல்துறைக்கு உள்ளது. சட்டம் ஒழுங்கை மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமையை பாதுகாக்க வேண்டியதும் காவல்துறை மற்றும் அரசின் கடமையாகும்.

ஆகவே, அரசியலமைப்பு உரிமைகளை பறிப்பதில் குறியாக இல்லாமல், ஜனநாயக முறையிலான போராட்டங்களுக்கு அனுமதி வழங்க, காவல்துறை இலாகாவுக்கு தலைமை வகிக்கும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சென்னையை பொறுத்தவரை குறிப்பிட்ட மூன்று இடங்களை தவிர்த்து இன்னும் பல இடங்களில் ஜனநாயக போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட காலங்களுக்குள் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!