இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை அண்ணா பல்கலை., மாணவியின் பாலியல் வன்கொடுமை ஊடக வெளிச்சத்தாலும், எதிர்கட்சிகளின் போராட்டங்களாலும் பூதாகரமான நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இராமநாதபுரம் அருகே நேற்று இரவில் ஆட்டோவில் சென்ற பெண் கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் சோளக்காட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு பகுதியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தஞ்சையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். அதேபோல் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடும்மைக்கு ஆளாகியுள்ளார். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்திய அயோக்கியன் ஒருவனால் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 17 வயது சிறுமி 9 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். திண்டுக்கல் அருகே சகோதரிகள் இருவர் கத்தி முனையில் கடத்திச் செல்லப்பட்டு 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் அவரது மகளை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை கொடூரத்தை செய்தனர். மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் ஒரு வாரம் முதல் 6 மாதங்களுக்குள் நடந்தவை. இப்படியாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது மிகுந்த கவலையை அளிக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்ற நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக இந்தியா உள்ளது என பல்வேறு தரப்பின் ஆய்வுகள், அறிக்கைகள் கூறும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மூலம் தமிழகமும் அத்தகையதொரு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை நோக்கிச் செல்கிறதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த குற்றம் தொடர்வதற்கு முக்கிய காரணம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் மீதான வழக்கு விசாரணை விரைவாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவதில்லை என்பதுதான். மேலும், கட்டுப்பாடில்லாத மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்கள் என்பதையும் மறுக்க முடியாது. பெண்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கும் இதுபோன்ற மிக மோசமான சூழல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, ஒழுக்கம் மிகுந்த சூழலை உருவாக்க நாம் தவறினால், அது நமது சமூகத்தை மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடும் என்பதை அரசும், பொது சமூகமும் உணர்ந்து பெண்களின் பாதுகாப்பை அனைத்து ரீதியிலும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









