இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாபெரும் பேரணி -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்கிற இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இன்று (நவ.16) எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்த பேரணி நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்புரையாற்றினார். மாநில செயலாளர் ரத்தினம் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் துவக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, அபுபக்கர் சித்தீக், நஜ்மா பேகம் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர். மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா தொகுப்புரை வழங்கினார். மாநில செயலாளர் ஏ.கே.கரீம் நன்றியுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.சபீக் அஹம்மது, முகம்மது ரஷீத், பஷீர் சுல்தான், அஸ்கர் அலி, ரவிச்சந்திரன், சென்னை வடக்கு  மண்டல செயலாளர் முகமது இஸ்மாயில், சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்களான ஜூனைத் அன்சாரி, சலீம் ஜாஃபர், பூட்டோ மைதீன், சீனி முகம்மது, அப்துல் ரசாக், முகமது பிலால், செய்யது அஹமது, வழ.நவ்ஃபில், ஆர்.எம்.கே.மாலிக், ஜூபைர் அலி, ஜாஃபர் ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட முன்னாள் தமிழக அமைச்சர், அஇஅதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் எம்.ராஜேஸ்வரி பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேரணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடை மூடப்பட்ட வகையில் அல்லாது திறந்தநிலை இடஒதுக்கீடாக வழங்கி, பிற்படுத்தப்பட்ட பிரிவிலும் போட்டியிடும் வகையில் சட்டத்தை மாற்றியமைத்து சமூகநீதியை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டால் அடைந்த பலன்கள் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் அவர் தனது உரையில், தமிழகத்தின் பல்வேறு சிறைகளில், 10 ஆண்டுகளை கடந்தும் 28 ஆண்டுகள் வரை சிறைகளில் பல்வேறு அவஸ்தைகளுடன் தங்களின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகள் உள்ளனர்.  நீதிபதி ஆதிநாதன் குழுவின் பரிந்துரை கிடைத்தும், தமிழக சிறைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வாக்குறுதிபடி விடுதலை செய்யாமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. இன்னும் 26 சிறைவாசிகள் நீதிமன்ற பரோலில் மட்டுமே உள்ளனர். அவர்களின் விடுதலை காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது. முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக அவர்களின் குடும்பத்தினர் உள்ளனர். ஆகவே, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வாக்குறுதிபடி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த பேரணியில், பெண்கள், குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, 7% இடஒதுக்கீடு கோரியும், சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!