ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே டாட்டா சுமோ காரில் கடத்தி வரப்பட்ட 2,659 கிலோ (58 மூட்டைகள்) ரேஷன் அரிசியை பறக்கும் படை தாசில்தார் தமீம் ராஜா மற்றும் ஆர்.ஐ முத்துராமலிங்கம் ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெறுவது கவலை அளிக்கிறது. இதற்கு முன்பு, ராமநாதபுரம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அரிசி கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பொதுமக்களின் கோரிக்கைகள்: இத்தகைய கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுக்கவும், ரேஷன் அரிசி தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்காக, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையால் 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதன் மூலம் எந்த பயனும் இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டுள்ளது.
அரசு இது போன்ற சட்ட விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்க்காமல் பொது விநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு உரிய முறையில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.