தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளுக்கு பல்லாண்டு காலமாக உள் தாள் ஒட்டி ஒட்டியே ஆட்சியை ஓட்டி வந்த அரசாங்கம் கடைசியாக ஸ்மார்ட் கார்டு திட்டம் என்கிற பெயரில் சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் 2009 ஆம் ஆண்டோடு முடிவடைந்து விட்டது. அதில் இருந்து இரண்டு, இரண்டு ஆண்டுகள் வீதம் உள்தாள் ஒட்டப்பட்டுக் கொண்டே வந்தது. ஏறத்தாழ 13 ஆண்டு காலம் மைதாவிலும், சர்க்கரையிலும், மண்ணெண்ணெய்யிலும், பாமாயிலிலும் நனைந்து துவண்டு போன குடும்ப அட்டைகளின் ஆயுள் ஒரு வழியாக முடிக்கப்பட்டு அதன் ஆத்மா சாந்தி அடையாமல் ஸ்மார்ட் கார்டு ரூபத்தில் நம்மை மிரட்டி வருகிறது. முன்னர் ரேஷன் கார்டுகளில் இருந்த குளறுபடிகளை விட தற்போது ஸ்மார்ட் கார்டுகளில் தான் உச்ச கட்ட குழப்ப நிலை நீடிக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உணவு பஞ்சத்தை போக்க வெள்ளையனால் 1939 ஆம் ஆண்டு மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரேஷன் திட்டம், சுதந்திரத்திற்கு பிறகு படிப்படியாக மாநில அரசுகளால் ஏழை மக்களின் பசி தீர்க்க துவங்கப்பட்டு பல மாநிலங்களில் தற்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று சொன்னவுடன், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை கள்ளச்சந்தையில் விற்று கோடி கணக்கில் காசு பார்த்த சில அதிகாரிகளுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ஊழல் பேர்வழிகளுக்கும் பேரிடியாக இருந்தது. திடீரென ஸ்மார்ட் கார்டு திட்டம் வந்தால் எங்கே நம்மால் கள்ளத்தனமாக பணம் சம்பாதிக்க முடியாமல் போய் விடுமோ.? என பயம் அவர்களை தொற்றியது.

இதுவரை லஞ்ச பணத்தில் மிதந்து விட்டு, திடீரென பணம் வராமல் இருந்தால் தங்களால் சமாளிக்க முடியாது என்பதற்காக ஸ்மார்ட் திட்டத்தை வரவிடாமல் முட்டுக்கட்டையாக நின்றனர். அதையெல்லாம் சமாளித்த அசராத அரசாங்கம், கடைசியாக.. உள்தாள் ஒட்டப்பட்ட போது இது 6 மாதம் வரையே இருக்கும். அதன் பிறகு மின்னணு ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று சம்பந்தப்பட்ட துறை வாயிலாக வாக்குறுதி அளித்து அதன் பிரகாரம் நியாயவிலைக் கடைகளில் ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஸ்மார்ட் கார்டுகள் வர ஆரம்பித்து விட்டன. ஆனால் இதுவரை 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.02 கோடி பேருக்கே ஸ்மார்ட் கார்டுகள் கிடைத்துள்ளன.
சென்னையில் மட்டும் சுமார் 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 7 லட்சம் பேருக்கே ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பணி மந்தமாக நடைபெறுவதற்கு காரணம் பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை வெளியிட தயங்கியதே என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதே வேளையில் நியாயவிலைக் கடைகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட குடும்பத் தலைவர்களின் புகைப்படங்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் பதிவோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுதாகவும் அவை பொருந்தவில்லை என்றால் நிராகரிக்கப்படுதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு 10 சதவீத புகைப்படங்கள் நிராகரிக்கப்பட்டு அவற்றை மறு பதிவேற்றம் செய்யுமாறு நியாய விலைக் கடைகள் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஏழை எளிய அப்பாவி மக்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த பதிவேற்றத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விவரம் ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக பொதுமக்கள் கணினி மையங்களை நாடிச் செல்கிறார்கள். ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் டிஜிட்டல் திட்டங்களால் கல்லா கட்டி வரும் நெட் செண்டர்கள் பாமரனின் சுருக்குப் பையையும் பதம் பார்க்க தவறுவதில்லை. ஸ்மார்ட் கார்டில் ஒரு புதிய பெயர் பதிவேற்றம் செய்ய ரூ. 40, தவறாக இருக்கும் பெயர் ஒன்றினை திருத்தம் செய்ய ரூ. 25 என்று பணம் பிடுங்குகின்றனர். பல நேரங்களில் டிஎன்இபிடிஎஸ் வலை தளத்தில் நீண்ட தடங்கல் ஏற்படுகிறது. இதனால் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க நேரிடுகிறது. கைப்பேசி வாயிலாகவே பதிவேற்றம் செய்யலாம் என்றால் அதுவும் முடிவதில்லை. இதன் காரணமாக அரசு அறிவித்தப்படி 2017 ஜூன் மாதத்திற்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு திட்டம் நிறைவேறாமல் மீண்டும் காலவரையின்றி நீள்கிறது. ஆகவே இந்த கெடுவை இன்னும் நீட்டிக்க வேண்டிய அவசியம் தற்போது எற்பட்டு இருக்கிறது.

ஒரே நேரத்தில் இந்த வலைதளம் ஏராளமானோரால் பயன்படுத்தப்படுவதால் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிகிறது. ஏற்கனவே சமாதி நிலையில் இருக்கும் அரசின் இ சேவை மையங்களுக்குச் சென்றாலும் இதே நிலைமை தான். பிரிண்டர் வேலை செய்யவில்லை, இன்டர்நெட் சரியாக கிடைக்கவில்லை, கம்பியூட்டர் பழுதாகியுள்ளது என்று அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே ஸ்மார்ட் கார்டு வழங்குவதை துரிதப்படுத்துவதற்கான பணியை அரசாங்கம் உடனே மேற்கொள்ள வேண்டும் என்பதும் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் இதற்கென சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விரைவில் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கிட வேண்டுமென்பதும் அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
இதற்கென கூடுதல் பணியாளர்களை நியமித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க வேண்டும். ஆதார் எண்களை இணைத்த அனைருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டியது அரசின் தலையாய பொறுப்பு. இதை நிறைவேற்றும் வரை எவ்வித தடையுமின்றி அத்தியாவசிய பொருள்களை வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். அப்போது தான் பல்லாண்டு காலம் உள் தாள் ஒட்டி ஒட்டியே நம்மோடு வாழ்ந்து மறைந்த ரேஷன் கார்டுகளின் ஆத்மா சாந்தி அடையும். கள்ள சந்தையில் ரேஷன் பொருள்களை விற்று காசு பார்த்த ஊழல் பெருச்சாளிகளின் ஆட்டம் அடங்கும். எதுவுமே துவக்கத்தில் குழப்பமாக தான் இருக்கும். போக போகத் தான் தெளிவு பிறக்கும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சொன்னதை உண்மை என்று நம்பித் தான் ஆக வேண்டியிருக்கிறது இந்த ஜனநாயக நாட்டில்…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









