தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:- பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 1 ஆம் தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் முண்டியடிக்க தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும். அதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.மெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம்.
ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய ரேஷன் கார்டுகளையும் 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் கார்டில் திருத்தம் இருந்தால் இ.சேவை மையத்துக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் போனிலும் ஆப் டவுன்லோடு செய்து ஓ.டி.பி. நம்பர் மூலம் திருத்தம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிலர் போட்டோ கொடுக்காதது உள்பட பல்வேறு காரணத்தால் பிரிண்ட் செய்வதில் காலதாமதம் ஆனது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகிறது.
எனவே கார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதட்டப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்போனுக்கு கண்டிப்பாக மெசேஜ் வரும். அதன் பிறகு ரேஷன் கடைக்கு வந்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









