இராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு ஆகியோர் பயிற்சி பெற்ற அனுபவம் மிக்க கட்டுமான தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது: நமது மாவட்டத்தில் வேளாண்மை, கல்வி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு என்பதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் அனுபவமிக்க தொழிலாளர்களின் திறமையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கும் விதமாக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் கொத்தனார், மின்சார பணியாளர், பிளம்பர், தச்சர், கம்பி வளைப்பவர்,பெயின்டர், டைல்ஸ் ஒட்டுபவர் போன்ற பல்வேறு முன்னனுபவமிக்க தொழிலாளர்களுக்கு குறுகிய கால பயிற்சி வழங்குவதோடு திறனை மதிப்பீடு செய்து அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன்படி 740 பேருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் 3 ,300 பேருக்கு பல்வேறு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டு 2,134 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் சார்ந்த மற்றும் மதிப்பு கூட்டு செய்தல், பனை மரம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு செய்து சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என பேசினார்.
விழாவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் விஷ்ணு பேசியதாவது: தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் கட்டுமானம் தொழில் முன் அனுபவம் மிக்க திறமை வாய்ந்த தொழிலாளர்களின் திறமையை மதிப்பீடு செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சான்றிதழ் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் 2017- 18 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தெரிவு செய்த வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணுபேசினார்.
இராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் சை.ரமேஷ் குமார் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மு.கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணா துரை உட்பட அரசு அலுவலர்கள் பயிற்சி பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












