சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் மாசிமக தெப்ப உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது உலகப் புகழ் பெற்ற திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களுள் மாசி மகத் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி மக தெப்ப திருவிழா கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து தினமும் பெருமாள் தேவியருடன் பல வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடந்தது. இன்று சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதி புறப்பாடும், முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்களின் சேவைக்குப் பின்னர் தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். மண்டபத்தில் பெருமாளுக்கு திருவந்திக்காப்பும், தீபாராதனையும் நடந்தது. பின்பு மதியம் தெப்பக்குளத்தில் சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை காட்டப்பட்டு தெப்பத்தில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத்தில் பெருமாள் வலம் வருகையில் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்களிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

You must be logged in to post a comment.