தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின. ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SIR நடவடிக்கைக்கு எதிராக கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

