புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் காலமானார்..

புகழ்பெற்ற தென்னிந்திய பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 வயதில் காலமானார். ஒரு வருடத்திற்கும் மேலாக கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் காலமானார். மாலை 7 மணியளவில் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்தை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 7:54 மணிக்கு அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த பி. ஜெயச்சந்திரனின் இசைப் பயணத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய சினிமாவிற்கு வழங்கியுள்ளார். திரைப்படப் பாடல்கள், இலகு இசை மற்றும் பக்திப் பாடல்கள் என பல்வேறு வகைகளில் அவரது இனிமையான குரல் எதிரொலித்தது. பல தலைமுறை இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தனது வாழ்நாள் முழுவதும், தென்னிந்திய இசைத் துறையில் ஜெயச்சந்திரன் பெரிய ஜம்பவானாக போற்றப்பட்டார். பி. ஜெயச்சந்திரன் 1944 மார்ச் 3ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ரவிபுரத்தில் பிறந்தார். பின்னர் இரிஞ்சாலக்குடாவிற்கு குடிபெயர்ந்தார். ஜெயச்சந்திரன் பின்னணிப் பாடகர் ஆவதற்கு அவரது அண்ணன் சுதாகரன் ஊக்கப்படுத்தினார். புகழ்பெற்ற பாடகர் யேசுதாஸின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாகரன். 1965ஆம் ஆண்டு வெளியான ‘குஞ்சாலி மரக்கார்’ படத்தில் பி. பாஸ்கரன் எழுதி சிதம்பரநாத் இசையமைத்த ‘ஒரு முல்லைப்பூ மாலமாய்’ என்ற பாடல் மூலம் ஜெயச்சந்திரன் அறிமுகமானார். 1973ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள்’ படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ‘பொன்னென்ன பூவென்ன’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர் இசையமைத்த ‘பெண்படா’ என்ற மலையாளத் திரைப்படத்தில் ‘வெள்ளி தேன் கிண்ணம் போல்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடினார். இதுதான் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடல் என்று கருதப்படுகிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!