அண்மையில் ரஜினிகாந்த் பேச்சுகளில் ஒரு மாற்றம் தென்படுவதைப் பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். நானும் கூட, இந்த அளவுக்கு வந்துவிட்டீர்கள், இன்னும் இறங்கி மக்களோடு நிற்க வாருங்கள் என்று கூறியிருக்கிறேன்.
கட்சித் தலைமையை மட்டுமே தான் ஏற்கப் போவதாகவும் ஆட்சித் தலைமையை வேறு யாரிடமாவது ஒப்படைக்கப் போவதாகவும் இப்போது அறிவித்திருக்கிறார். ஆட்சித்தலமையை அவரே ஏற்றாலும் சரி, வேறொருவரிடம் ஒப்படைத்தாலும் சரி, தேர்தலில் தனது கட்சிதான் வெற்றி பெறும் என்ற முடிவுக்கு எப்படி வந்தாரோ? ரசிகர்களை உற்சாகப்படுத்த இப்படிப் பேசுவது அவசியம்தான்.
ஆட்சித் தலைமையை ஏற்கத் தயங்குவதற்குக் காரணம் வயது மட்டும்தான் என்று நான் நினைக்கவில்லை. உண்மையிலேயே தனது கட்சியின் செயல்பாட்டை அப்படி அமைத்துக்கொள்ள அவர் விரும்பலாம். ஆனால், அவரே ‘சிஸ்டம் சரியில்லை’ என்று சொல்லியிருக்கிறார். எல்லா மட்டத்திலும் ஊழல், செயலின்மை, பாகுபாடு என்று பரவியிருக்கிறது. சமுதாயத்தில் மதவாதம், சாதியம் மேலோங்கியிருக்கிறது.
இந்த நிலையில் “ஸ்விட்ச் ஆன்” செய்ததும் விளக்கு எரிவது போல, தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆணைம பிறப்பிப்பதால் சிஸ்டம் தானாகச் சரியாகிவிடாது என்பதை அவர் இப்போது புரிந்துகொண்டிருக்கக்கூடும். இதையெல்லாம் மாற்ற முடியாதபோது அது இவர் மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, தன் விருப்பப்படி செயல்படக்கூடிய ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ!
கட்சிப் பொறுப்பில் ஒருவரும் ஆட்சிப் பொறுப்பில் வேறொருவரும் இருப்பது ஒன்றும் புதியதல்ல. கம்யூனிஸ்ட்டுகள் உள்பட பல இயக்கங்கள் இதற்கு முன்மாதிரியாக இருக்கின்றன.
ஆகவே, கட்சியைத் தொடங்கிய பிறகு அதன் அடிப்படைச் சித்தாந்தமாக எதை அறிவிக்கப்போகிறார், கொள்கைகள் என்று எதை உருவாக்கப்போகிறார் என்பதைப் பார்த்துதான் மதிப்பீடு செய்ய முடியும். அப்படியல்லாமல் முதலமைச்சர் பதவியில் ஆசையில்லை என்று சொல்லிவிட்டதாலேயே அதைப் பாராட்டிக் கொண்டாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சந்தேகத்தோடுதான் அவருடைய இந்த அறிவிப்பையும் பார்க்கிறேன்.
பாஜக ஆதரவாளர் என்ற தோற்றம் உருவானதற்கு ஊடகங்கள் மட்டும்தான் காரணமா? காஷ்மீருக்கான 370 சட்டம் விலக்கல், குடியுரிமைச் சட்டம் புகுத்தல் என்று ஒவ்வொன்றிலும் இவர் எடுத்த நிலைப்பாடு மத்திய அரசுக்குச் சாதகமாக இருந்ததால்தான் அந்தத் தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனிமேலாவது அதை மாற்றிக்கொள்வாரா?
அவருடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் ஒருவர், தலைவர் கண்டிப்பாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்பார், புரட்சி நடக்கும் என்று பேட்டியளித்ததைப் பார்த்தோம். ரஜினி முதலமைச்சராவதே புரட்சி என்று அவர் பேசுகிறார் எனில், புரட்சி என்றால் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்? தனது ரசிகர்களுக்கு ரஜினி முதலில் அதைச் சொல்லித்தரட்டும். அதற்கு முன் அவரே அது என்னவென்று கற்றுக்கொள்ளட்டும்.
ரசிகர் மன்றத்தினர் ஊருக்குள் சென்று மக்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்கிறார். கட்சியையும் தொடங்கவில்லை, கொள்கைகளையும் உருவாக்கவில்லை என்ற நிலையில் அவர்கள் மக்களிடம் எதைப் பேசுவார்கள்? இவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை மட்டுமா? தனிமனித வழிபாட்டுப் பிரச்சாரம் ஆரோக்கியமான சிஸ்டமாகுமா?
தலைமை என்றாலே தனி மனிதத் தலைமையைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். நம் சமூக அமைப்பில் அதற்கொரு முக்கிய இடமிருப்பது உண்மைதான். ஆனால், கட்சியானாலும் சரி, ஆட்சியானாலும் சரி – கூட்டுத் தலைமையாகச் செயல்படுவதே ஆரோக்கியமான அரசியல்.
கட்சிக்கு மட்டுமே தலைமை ஏற்பது என்ற முடிவைக் கூட அவர் கூட்டாக விவாதித்து, பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையில் எடுக்கவில்லையே! எந்தப் பிரச்சினையானாலும் தனது கருத்தைக் கட்சியில் கருத்தாகச் சொல்லப்போகிறாரா, கட்சியின் கருத்தைத் தனது கருத்தாக வெளிப்படுத்தப் போகிறாரா? கட்சிக்கு உள்ளே ஜனநாயகம் மிக முக்கியம்.
ஒருவேளை, கட்சியைத் தொடங்கியபிறகு அதில் நியமிக்கப்படுகிற அல்லது தேர்ந்தெடுக்கப்படுகிற பொதுக்குழு அல்லது செயற்குழு போன்ற ஜனநாயகப்பூர்வ அமைப்புகளில் இது பற்றி விவாதிப்பதாக வைத்துக்கொள்வோம். அதிலே பெரும்பான்மையினர் கருத்து இவர் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருக்கிறது என்றால், அதை இவர் ஏற்க முடியாது என்று பிடிவாதமாக இருப்பாரா அல்லது, கட்சியில் பெரும்பான்மைக் கருத்து இது என்று சொல்லி முடிவை மாற்றிக்கொள்வாரா?
கூட்டுத் தலைமை என்கிறபோது கட்சிக்குள் மட்டும் நான் சொல்லவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்காக மற்ற இயக்ங்களோடு கூட்டாக இணைந்து செயல்படுவதையும்தான் சொல்கிறேன். மற்ற கட்சிகள் பற்றி எதிர்மறையாக ஏற்கெனவே பேசிவிட்டதால் இனி அவர்களோடு எப்படி இணைந்து செயல்படுவது என்று யோசித்துக்கொண்டிருக்கக் கூடாது. ஆனால் ஏற்கெனவே மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறவர்களை சமூகவிரோதிகள் என்று சொன்னவர் இவர். சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை இஸ்லாமிய மதத் தலைவர்கள் தூண்டிவிடுகிறார்கள் என்றும் சொன்னவர் இவர். அந்தப் பார்வைகளை இப்போது சரியானபடி மாற்றிக்கொண்டாரா என்பதும் தெரிய வேண்டும்.
அப்படி மாற்றிக்கொள்ளாதவரையில், தமிழகத்தில் முற்போக்கான, ஜனநாயகப் பாதை வலுப்பெறுவதற்கு இவர் தடைக்கல்லாக இருப்பாரோ என்ற சந்தேகம் தொடரத்தான் செய்யும்.
-குமரேசன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









