தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே முதல்வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுகவும் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 29ம் தேதி முதல் மக்களைச் சந்திப்பதாக அறிவித்தார்.அதன்படி மு.க.ஸ்டாலின் இன்று முதல்நாளாக திருவண்ணாமலையில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது; 100 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன். கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது ரூ.7,000 கோடி அளவுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கருணாநிதி போல் அளித்த வாக்குறுதியை நானும் நிறைவேற்றுவேன். 90 வயது வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. பிரச்சனைகளை திமுகவால்தான் தீர்க்க முடியும் என கருதி மக்கள் மனுக்களை அளித்துள்ளனர்.
மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக ஆட்சி அமையும். திமுக என்பது சாமானியர்களின் இயக்கம்; விவசாயிகள், நெசவாளர்கள் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது தான் திமுக. கடந்த 50 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் நான் செல்லாத கிராமமே இல்லை; தமிழக மக்களின் துயரங்களில் பங்கெடுத்தவன் நான். தமிழக மக்களின் கண்ணீரை துடைப்பதில் என்றும் அக்கறை கொண்டவன் நான் எனவும் கூறினார். கூட்டத்தில் நமது மாவட்ட கழக செயலாளர் எ.வ. வேலு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.