பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்; வழக்கை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்…

பொள்ளாச்சியில் பல நூறு கணக்கில் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு கொண்டு அவர்களைச் சீரழித்தக் கொடூரக்கும்பல் குறித்து வெளியே வந்துக் கொண்டிருக்கும் செய்திகளும், காணொளிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கிறது. கேக்கவே குலை நடுங்க வைக்கிற வைக்கிற வகையில் இருக்கிற இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினையும், பலத்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடங்கி பலதரப்புப் பெண்கள் இக்கும்பலால் ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலும், அவர்கள் அவமானத்திற்குப் பயந்து வெளியே சொல்ல அச்சப்பட்டும் இருக்கக்கூடும் என்பதாலும் இதில் பாதிக்கப்பட்டப் பெண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெளியாகியிருக்கிற காணொளியில் கேட்கிற அந்தப் பெண்களின் கதறலும், அழுகுரலும், ஓலமும் பெரும் மனவலியைத் தருகிறது. பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடந்தேறும் இக்கொடுஞ்செயல்கள் யாவும் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தப் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பொள்ளாச்சி பகுதியில் ஆளும் கட்சியினரின் துணையோடு பெரும் வலைப்பின்னல் அமைக்கப்பட்டு அதனூடாகப் பெண்களை நயவஞ்சகமாக ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு கொள்வதும், அதனையே காணொளியாக எடுத்துப் பணம் பறிப்பதும், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்குப் பெண்களை இரையாக்குவதுமானப் பெரும் பாலியல் வக்கிரங்களும், வன்கொடுமைகளும் கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்று வந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டப் பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்தும் போயிருக்கிறார்கள். இருந்தபோதிலும், அம்மரணங்கள் யாவும், ‘காதல் தோல்வி தற்கொலைகள்’ என இவ்வளவு நாட்களாக மூடி மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஏழு ஆண்டுகளாக நடந்து வந்திருக்கும் இக்கோரச்செயல்கள் தற்போதுதான் ஊடகத்தின் மூலமாக வெளிவுலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. இக்கும்பலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததற்காகவே தாக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தாக்கியவர்கள் கைதுசெய்யப்பட்டு மூன்றே நாட்களில் பிணையில் வெளியே வந்திருக்கின்றனர் என்பதன் மூலம் இதன் பின்னணியிலியிருக்கும் அதிகாரப்பலமும், அரசியல் பலமும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.
பல நூற்றுக்கணக்கானப் பெண்களின் வாழ்க்கையினைச் சீரழித்த பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், ஆளும் கட்சியினரின் தலையீடு இவ்வழக்கில் இருக்கக்கூடும் என்பதால் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு இவ்வழக்கை மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யாது ஆளும் வர்க்கம் தனது அதிகாரப்பலம் கொண்டு இப்பாலியல் வன்கொடுமைகளை மூடி மறைத்து, குற்றவாளிகளைத் தப்பிக்க விட முற்படுமானால், அது வாக்குச் செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்தத் தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம். அதனை ஒருபோதும் தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இப்படுபாதகச் செயலையும், அதற்குத் துணைபோகும் அதிமுக அரசின் அடாவடித்தனத்தையும் மக்கள் மன்றத்தில் துகிலுரித்து அம்பலப்படுத்துவோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!