இன்றைய தினம் அண்ணன் சீமான் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியதற்காக தேசத்துரோக வழக்கு அவர் மீது பதியப்பட்டு உள்ளது. (குற்ற எண் 864/2020)
எப்போதும் இஸ்லாமியர்களுக்கு நண்பனாக இருப்பது போல நடித்து , இப்தார் நிகழ்ச்சியில் தொப்பி அணிந்து நாடகம் நடித்து, வாக்கு அறுவடை செய்கின்ற எந்த திராவிட கட்சியின் தலைவரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் வழக்கு பெற்றதில்லை.
ஏனெனில் இவர்கள் பாசாங்குக்காரர்கள். வாக்கு அறுவடைக்காக மட்டுமே பேச வாய் திறந்தவர்கள்.
இஸ்லாமிய தமிழர்களை “சிறுபான்மை” என காலம்தோறும் பேசி, அவர்களை தனிமைப்படுத்தி, ஒதுக்கி ஓரம் கட்டி , வைத்திருந்த சதிகளை அம்பலப்படுத்தி அவர்கள் சிறுபான்மையினர் அல்லர், தமிழர் என்கின்ற பெரும்பான்மை தேசிய இனத்தின் பெருமைமிக்க அங்கத்தினர் என்று உண்மையை உரத்த குரலில் முழங்கிய அண்ணன் சீமான் மட்டுமே “இஸ்லாமியத் தமிழர்களின் உரிமைகளுக்கானவர்.. உயிரான உடன்பிறந்தானவர்..” என்பதை இன்று அவர் பெற்றிருக்கிற இன்னொரு தேசத்துரோக வழக்கின் மூலம் உறுதி செய்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாக்கிற்காக ஸ்டாலின் போல மற்ற திராவிட கட்சிகளின் தலைவர்கள் போல அண்ணன் சீமானும் இப்தார் தொப்பி அணிந்து என்றுமே நடித்ததில்லை.
அவரைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் தனிப்பட்ட முறையில் தனக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரானது என்பதை உணர்ந்து அவர் களத்தில் உறுதியாக நிற்கிறார்.
நாடெங்கிலும் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் வண்ணாரப்பேட்டையைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்காத சூழலில் அண்ணன் சீமானும் அவரது தம்பிகளும் நாடு முழுக்க ஓடோடி எமது இஸ்லாமிய உறவுகளோடு கைகோர்த்து நின்றார்கள்.
தொடர்ச்சியாக 20 நாட்களுக்கும் மேலாக அண்ணன் சீமான் ஒருங்கிணைந்த இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றுப் பேசினார். ஆனால் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினோ கள்ள மௌனம் காத்து வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டார்.
கேட்டால் இவர்கள் தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்று பீற்றிக் கொள்ள வேண்டியது…
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பிஜேபிக்கு ஆதரவாக அமைந்து விடும் என்றெல்லாம் திமுக தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்கிறது.
ஆனால் திமுகவோ வாக்கு வேட்டை நடத்திவிட்டு தேர்தல் முடிந்த பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு அடக்கு முறைகளில் பிஜேபிக்கு ஆதரவான கள்ள மௌனத்தை தொடர்ச்சியாக காட்டிக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் ஆட் தூக்கி சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நடுநிலை என்ற பெயரில் வெளிநடப்பு செய்து தன்னை யார் என்று திமுக அடிக்கடி வெளிப்படுத்திக் கொள்கிறது.
திமுகவுக்கு செலுத்தப்படுகின்ற இஸ்லாமியர்கள் வாக்கு நேரடியாக பிஜேபிக்கு ஆதரவான வாக்கு என்பதை அப்பாவி இஸ்லாமியர்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு அடிமை நிலையிலிருந்து விடுதலை.
ஆளுகின்ற அரசாங்கங்களினால் இன்று அண்ணன் சீமானுக்கு வழங்கப்பட்டு இருக்கிற தேசத் துரோகி பட்டம்.. அவரைப் பொறுத்தவரையில் அவரது புரட்சிகர போராட்ட வாழ்விற்கு கிடைத்திருக்கிற இன்னுமொரு நற்சான்றிதழ்.
மணி செந்தில்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









