எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைக்கும் முடிவை கைவிட வேண்டும்!- மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியிறுத்தல்..

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைக்கும் முடிவை கைவிட வேண்டும்!- மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியிறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (ஏப்.06) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், எம்.பி.க்கள், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்கவும், எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்மூலம் பேரிடர் காலங்களை கூட எதிர்கொள்ள இயலாத, 6 ஆண்டுகால மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதில் எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், எம்.பி.க்களின் சம்பளத்தில் 30% குறைப்பு நடவடிக்கையை எம்.பிக்களே வரவேற்றுள்ளனர். அதேவேளையில் தொகுதி மக்களுக்கான எம்.பிக்களின் மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகள் நிறுத்திவைக்கும் முடிவு என்பது ஏற்புடையதல்ல. அரசின் இந்த முடிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எம்.பிக்களுக்கு இருக்கும் மிக முக்கியமான உரிமைகளில் ஒன்றான தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பது என்பது அவர்களின் செயல்பாட்டை மறைமுகமாக தடுத்து வைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தெரிகிறது.

மத்திய அரசின் மூலம் எவ்வித திட்டங்களும் கிடைக்கப்பெறாத சூழலில் கூட, தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாகவே எம்.பிக்கள் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் அந்த நிதியை இரண்டு ஆண்டு காலத்துக்கு நிறுத்தி வைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ரூ.7800 கோடி நிதிக்காக தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, புதிதாக திட்டமிட்டுள்ள ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான பாராளுமன்ற கட்டிடப் பணியை நிறுத்தி வைக்கலாம். அதேபோல் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடமிருந்தும் ஆயுத கொள்முதலை நிறுத்தி வைப்பதன் மூலம் பல ஆயிரம் கோடி மிச்சப்படுத்தலாம். எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை தற்சமயம் நிறுத்தி வைப்பதன் மூலம் ஆயிரம் கோடிக்கு மேல் நிதியை மிச்சப்படுத்தலாம். பிரதமர் மோடியை அடையாளப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தேவையற்ற விளம்பர செலவீனங்களை முழுவதும் நிறுத்தலாம்.

இவைபோன்ற பல தேவையற்ற திட்டங்களை நிறுத்தி வைப்பதன் மூலமும், பல ஆயிரம் கோடி கார்ப்பரேட்டுகளின் வாராக்கடனை தள்ளுபடி செய்யாமல் அதனை வசூலிப்பதன் மூலமும், கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி வரிச்சலுகையை வழங்குவதை தவிர்ப்பதன் மூலமும் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டுள்ள தேவையான நிதிகளை அடைய முடியும் என்பதால், எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

எம்.பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் குறைக்கும் நடவடிக்கையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அதேவேளையில் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவதால் தொகுதி மக்கள் நேரடியாகவே பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால் மத்திய அரசு அந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மத்திய அரசின் எந்த ஒரு நடவடிக்கையும் மக்களை நேரடியாக பாதிக்காத திட்டங்களாகவே அமைய வேண்டுமே தவிர, மக்களை பாதிக்கிற வகையில் அது அமையக்கூடாது என்பதை மத்திய அரசு கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!