திருப்பூரில் சட்டவிரோத நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் மூன்று பேர் பலி!காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு  தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்!  – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருப்பூர் பாண்டியன் நகர் சத்யா காலனியில், கார்த்திக் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வீட்டின் அருகில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிகுண்டு வெடித்து கட்டிடம் சிதறியதில், அந்த தெருவில் வசித்து வந்த  எஸ்டிபிஐ கட்சி தொண்டர் அபுதாஹிரின் ஒன்பது மாத குழந்தை ஆலியா ஷெரின் மீது கல் விழுந்ததால் அந்தக் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சத்யா காலணியில் கடந்த பல வருடங்களாகவே  கார்த்திக் சட்டவிரோதமாக வெடிகளை தயாரித்தும்,  நாட்டு வெடிகுண்டு தயாரித்தும் வருகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை மெத்தன போக்குடன் செயல்பட்டதின் காரணமாக இன்றைக்கு விபத்து ஏற்பட்டு மூன்று உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளன. 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அருகில் உள்ள பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தமிழக காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கு காரணம், இது காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது.  தமிழகத்தில் திமுக ஆட்சியில் நிலவிவரும்  சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளில் இந்த வெடிகுண்டு விபத்தும்  இடம் பிடித்துள்ளது. சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்த கார்த்திக், பாஜக உள்ளிட்ட சங்க்பரிவார அமைப்புகளுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தப்பட்ட நிலையில், இந்த நாசகார சதி செயலுக்கு அந்த பிண்ணணியும் காரணமா? எனவும் விசாரிப்பதோடு, இந்த வெடிகுண்டு விபத்து குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். யாருக்காக, எதற்காக அவர் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தார், அவருடன் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட கார்த்திக்குடன்  தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சிறையிலடைக்க  வேண்டும், பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும்  தீர விசாரணை நடத்த வேண்டும்  எனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த வெடிகுண்டு விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!