புரட்சியாளர் அம்பேத்கர் அவமதிப்பு..! – எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நடப்பு நாடாளுமன்ற கூட்ட விவாதத்தின் போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என பேசினார். ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த அமைச்சர் அமித் ஷா கூறிய இத்தகைய கிண்டலான கருத்துகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மீதான பாஜக அரசின் அணுகுமுறையை காட்டுகிறது. இந்த அவமதிப்பு பேச்சு மூலமாக, அவர் மதச்சார்பற்ற நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்க தகுதியற்றவராகி விட்டார். ஆகவே, இந்த கேலியான அவமதிப்பு கருத்துக்காக அமித் ஷா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்க மறுத்தால் அவரை உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து மோடி அரசு வெளியேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதனை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.  அதனடிப்படையில் தமிழகத்திலும் நாளை (டிச.20) எஸ்டிபிஐ கட்சி சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாட்டு மக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!