இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் அழகேந்திரன், மற்றொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்த காரணத்திற்காக ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பெண்ணின் உறவினர் ஒருவரால் மிரட்டப்பட்டு பெண்ணை மட்டும் அவர்கள் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இளைஞர் அழகேந்திரனை பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவர் போனில் தொடர்புகொண்டு அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் இளைஞர் வீடு திரும்பாத நிலையில், அவர் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த கொலை முழுக்க முழுக்க காதல் எதிர்ப்பின் காரணமாக நடைபெற்றுள்ளதாகவும், வழக்கை ஆணவப்படுகொலை வழக்காக பதிவு செய்து, கொலை குற்றத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்திட வேண்டும் எனவும் இளைஞரின் பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், நிர்வாணமாக்கப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக நடந்த இந்த கொலை தனியொருவரால் மட்டும் நிகழ்த்த வாய்ப்பில்லை என்பதால், தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை ஆணவப்படுகொலை வழக்காக பதிவு செய்து, குற்றமிழைத்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு தொடரும் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வகையில் ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.