இராமநாதபுரம், அக்.15-
இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி முகவர்கள் கூட்டம், வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ரியாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கீழை. ஜஹாங்கீர் ஆருஸி, டாக்டர் ஜெமீலுன் நிஸா உள்பட பலர் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலில் முகவர்களின் பணிகள், பணியாற்றும் விதம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள எஸ்டிபிஐ கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது:
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், கொரோனா பேரிடர் கால முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய தொகுப்பூதிய செவிலியர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல், படகுகள், வலை சேதப்படுத்தல் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு, கைது உள்ளிட்ட அத்துமீறல்களை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இத்தகைய நிகழ்வுகள் தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதை உணர்த்துகின்றன என்றார். இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் வரவேற்றார். இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாஞ்சு பீர் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.