பூமியின் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழலில் மனித சமூகம் உள்ளது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் பூமியில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் பங்களிப்புடன் ஒரு கோடி விதைப் பந்துகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்து விதைப்பந்து புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விதைப் பந்துகள் தயாரிக்கும் பணியை சமூக நல ஆர்வலர் வெங்காடம் பட்டி பூ.திருமாறன், பல் மருத்துவர் ஏகலைவன், வரம் ஜவகர் ஆகியோர் தீவிரப்படுத்தி உள்ளனர்.


மேலும் திருச்செந்தூர் செந்தில் குமரன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி தாளாளர் சண்முகம், முதல்வர் சத்யா, அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சில்வான் சுந்தர் சிங், திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை மரியாள், ஆசிரியை இருதய மேரி லையோலின் மிக ஆர்வமாக தங்களது பள்ளி குழந்தைகளை விதைப் பந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட செய்தனர். காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை பள்ளி குழந்தைகள் வெவ்வேறு கல்வி நிலையங்களில் விதைப் பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பூமியை மரங்கள் மூலம் பசுமையாக்கும் பணியில் திருமாறனுடன் சியன்னா பரமேஸ்வரன், திருச்செந்தூர் உதய குமார், மேட்டுப் பாளையம் ராஜ் பிரதீப், பழனி நித்தியா உள்ளிட்ட இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயலாற்றி வருகின்றனர். மேலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் விதைப் பந்துகள் தயாரிக்கும் பணிக்கு பள்ளி மாணவர்களை களம் இறக்கி விதை புரட்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
சமூக ஆர்வலர் திருமாறன் இது குறித்து கூறுகையில், இன்றைக்கு பூமி வெப்பமயமாகி வருகிறது. எனவே மரங்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது. மழைக்கு அடிப்படையான மரங்களை உருவாக்க வேண்டிய மிக, மிக நெருக்கடியான சூழலில் மனித சமூகம் உள்ளது. எனவே பூமியை பசுமையாக்கும் முயற்சியுடன் ஒரு மாணவர், ஒரு மரம் என்ற திட்டத்தை பல வருடங்களாக செயல்படுத்தி மாணவ, மாணவியர் மூலம் மரங்களின் நட்டு வளர்க்கும் பணியை செய்து வந்தோம். இதன் அடுத்த கட்டமாக விதைப் பந்துகள் மூலம் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இந்த விதைப் பந்துகளை உருவாக்குவதில் மிக உற்சாகத்துடன் செயலாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாகர்கோவிலில் உள்ள ரோஜாவனம் சர்வதேச பள்ளியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் 7 வட்சம் விதைகளைக் கொண்ட ஒரு லட்சத்து 56 ஆயிரம் விதைப் பந்துகளை உருவாக்கி சாதனை படைத்தனர். பசுமை புரட்சி, வெள்ளைப் புரட்சி போல பின் ஒரு காலத்தில் விதைப்பந்து புரட்சியும் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெறும். விதைப் பந்து தயாரிப்பில் ஈடுபடும் குழந்தைகளுக்கு ஹரி பிரியாணி நிறுவனம் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறது. ஒரு கோடி விதைப் பந்துகள் தயாரிப்பு திட்டத்தில் இணைய விரும்பும் கல்வி நிறுவனங்கள் 7708775647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பூ.திருமாறன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்