சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule) ஜனவரி 3, 1831ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840இல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான
போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.தேசிய அளவிலும், மகாராஷ்டிரத்திலும் சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர்கள் மகாத்மா ஜோதிராவ் பூலே என்றழைக்கப்பட்ட ஜோதிபா பூலேயும் அவருடைய மனைவி சாவித்திரி பாய் பூலேயும். தாழ்த்தப்பட்ட குழந்தைகள், குறிப்பாக பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதை இழுக்காக நினைத்த சமூகத்தில், கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பெரும் பணியைச் செய்தார்கள் பூலே தம்பதியினர். இதனால் ஆத்திரம் அடைந்த சமூகத்தின் மேல்தட்டு மக்கள், தொடர்ந்து வசைபாடினர். ஒரு கட்டத்தில், சொந்த குடும்பமே இவர்களை ஒதுக்கி வைத்தது. ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு
இடையில் கல்விப் பணியாற்றினார். 1849ஆம் ஆண்டில், வீட்டை விட்டு இருவரும் வெளியேற்றப்பட்டனர்.1897 இல் ஏற்பட்ட பிளேக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897ல் இறந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









