பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர்.
அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் உள்ள சாலையில் மூவரும் சந்தித்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் பசும்பொன் வந்து மூவரும் ஒன்றாக இணைந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர் வந்த சசிகலாவும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், சசிகலாவுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் பேசினார். ஆனால், சசிகலா வருவதற்கு முன்னதாக டிடிவி தினகரன் அந்த இடத்தில் புறப்பட்டுவிட்டார். அதைத் தொடர்ந்து சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நடக்குறது எல்லாமே சர்பிரைஸ்ஸா நடக்கும்” என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி எல்லாரையும் துரோகிகள் என்று கூறியிருக்காரே..? இந்தத் துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு சசிகலா பேசுகையில், “அதிமுக ஆட்சிக்கு வரும், அதை நீங்கள் பொருத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

