அரசு நிர்வாகத்தின் மெத்தன போக்கு; சொந்த ஏற்பாட்டில் ஊருக்குச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!
மத்திய, மாநில அரசுகள் புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதில் மெத்தனம் காட்டி வருவதால், இனியும் அரசுகளை நம்பிப் பயனில்லை என்ற நிலையில் நபர் ஒன்றுக்கு 7ஆயிரம் ரூபாய் செலவு செய்து 120 தொழிலாளர்கள் சேலத்திலிருந்து தங்கள் சொந்த ஊரான பீகாருக்குப் புறப்பட்டனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, இடங்கணசாலை, நடுவனேரி, வேம்படிதாளம், தப்பக்குட்டை, கே.கே.நகர், கல்பாரப்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, மகுடஞ்சாவடி மற்றும் காக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பீகார், அசாம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விசைத்தறி கூடங்களில் ஜவுளி மற்றும் அதன் சார்புடைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் இத்தொழிலாளர்கள் வருமான மின்றி சரியான உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் ஊருக்கு செல்வதற்காக தற்போது தங்கியிருக்கும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், அரசு நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த சனியன்று 300 -க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இளம்பிள்ளையில் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மகுடஞ்சாவடி காவல் துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று நாட்களில் தங்கள் ஊருக்கு அனுப்ப வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்திருந்தனர். ஆனால், இதன்பின்னரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இதனால் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 120 தொழிலாளர்கள் இ -பாஸ் மூலம் அனுமதி பெற்று ஒரு பேருந்துக்கு 30 பேர் என மொத்தம் 4 தனியார் பேருந்துகள் ஏற்பாடு செய்து ஒரு நபருக்கு பயணச்செலவு அதிகபட்ச கட்டணமாக ரூ. 7 ஆயிரம் தங்கள் சொந்த செலவில் செலுத்தி ஊர் திரும்பினர்.


You must be logged in to post a comment.