மென்பொருள் குளறுபடியால் ஊதியத்தில் கூடுதல் வருமான வரி பிடித்தம்:அதிருப்தியில் அரசு ஊழியர்கள் &ஆசிரியர்கள்..
மென் பொருள் குளறுபடியால் ஊதியத்தில் கூடுதல் வருமான வரி பிடித்தம் செய்யப்படுவதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் மூலம் ஊதியம் பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்குரிய உத்தேச ஊதியம் கணக்கீடு செய்யப்பட்டு அதற்கேற்ப மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணம் மென்பொருள் மூலமே பிடித்தம் செய்யப்படுகிறது. ஏற்கனவே பிடித்தது போக மீதி தொகை முழுமையாக பிப்ரவரி மாதத்தில் மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இந்த ஆண்டு வங்கிகளில் வீட்டு கடன் பெற்றவர்களுக்கு 100 புள்ளிகளுக்கு மேலாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வருமான வரி தேர்வு செய்த பலருக்கு செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையை விட கூடுதலாக பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்த பலரும் புதிய வருமான வரி முறைக்கு மாற முயற்சி செய்கின்றனர். ஆனால் மென்பொருள் அனுமதிக்கவில்லை. எனவே புதிய வருமான வரி பிடித்தம் செய்வதற்கான வழிமுறையை இந்த மாதம் ஏற்படுத்த வேண்டும் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு கட்டும் கூடுதல் வருமான வரி தொகை மீண்டும் திரும்ப பெற தாமதமாகும் என்றும் தெரிவித்தனர். எனவே சரியான வருமான வரியை கணக்கீடு செய்து பிடித்தம் செய்ய புதிய , பழைய வருமான வரி முறையை எனேபிள் செய்ய வேண்டும் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இதனால் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகப்படியான வருமான வரி அவரவர் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக பலரும் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் முறையிட்டு வருவது எண்ணத்தக்கது.
தமக்கோ, குடும்பத்தினருக்கோ உயிர் காக்கும் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டோர், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய் பாதிப்புக்கு உள்ளானோர், நோயாளிகளான பெற்றோரைப் பராமரிப்பு செய்வோர், மாற்றுத்திறனாளிகளான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனிநபர் வருமானவரிச் சலுகைகள் இந்த தாமாக இணைய வழியில் வருமான வரி பிடித்தம் செய்யும் முறையில் கணக்கிடவும் கருத்தில் கொள்ளப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கூடுதலாகப் பிடித்தம் செய்யப்பட்ட மாதாந்திர வருமானவரி தொகையினை மீண்டும் வருமானவரித்துறையிடம் மீளப் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அடிப்படை அன்றாட வாழ்வாதாரத்துக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தின் ஒரு பெரும் பகுதியினைத் தவறாகக் கணக்கீடு செய்யப்பட்ட வருமான வரித்துறையிடம் செலுத்தி விட்டு அதைத் திரும்பப் பெறுவதற்காக நெடுநாள்கள் காத்திருக்க வேண்டும் என்பது பாதிக்கப்படுவோர் எதிர்நோக்கும் ஆகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இத்தகைய மிகையான வருமானவரி பிடித்தம் காரணமாகக் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடிக்குப் பணியாளர்கள் ஆட்படுவது உறுதி. ஏனெனில், ஒவ்வொரு மாதமும் பெறும் ஊதியத்தில் பல்வேறு பெரும் கடன்கள் மற்றும் சிறு முதலீடுகள் சார்ந்து ஏற்கனவே கொண்டிருக்கும் திட்டமிடுதலில் இந்த எதிர்பாராத கூடுதல் செலவினமானது அவர்களது குரல்வளையை நெரிக்கக் கூடும்.
அதைவிடுத்து, மாத ஊதியத்தை மட்டுமே முழுதாக மலைபோல் நம்பி வாழும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை வாட்டி வதைப்பது என்பது சரியல்ல. அவ்வப்போது நிகழும் பண்டிகைகள் சார்ந்த செலவுகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சார்ந்த சுக, துக்க நிகழ்வுகள் சார்ந்த திடீர் செலவினங்கள், எதிர்பாரா மருத்துவ சிகிச்சை செலவுகள் மற்றும் கல்விச் செலவினங்கள் ஆகியவற்றுடன் உழன்று கொண்டிருப்போரின் அடிமடியில் கைவைப்பதாக இந்த தவறான கணக்கீட்டின் மூலம் கட்டாய முன் வருமானவரி பிடித்தம் உள்ளது.
எனவே பழைய மற்றும் புதிய வருமான வரியை தேர்வு செய்ய மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கருவூல துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் . இது ஊழியர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் இதில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









