ஒழிக்கப்படவேண்டிய ஒடுக்கத்துப்புதன் (ஷஃபர் மாதம் பீடை மாதமா???)

அரபி வருடத்தில் இரண்டாவது மாதமாகிய சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதும், அந்த மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பதும், அறியாமைக்காலத்தில் அரபிகளின் வழக்கம்.  அவ்வழக்கம் இன்றும் நம் சமுதாயத்தில் புரையோடி இருக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அப்படி நியதி எதுவும்இல்லை.

சபர் மாதத்தின் இறுதி புதன் கிழமைக்கு ஒடுக்கத்துப் புதன் என்று பழந்தமிழில் பெயர் சூட்டி அன்றைய தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், கடற்கரையிலும், பூங்காக்களின் புல்வெளிகளிலும் பொழுதைக் கழிப்பதும், அன்றைய தினத்தில் முஸீபத்துகள் இறங்கும் என்று நினைப்பதும், இலைகளிலும் தட்டுக்களிலும் எதையெதையோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், அன்றைய தினத்துக்காகவே வீடு முழுவதையும் கழுவிச் சுத்தப்படுத்துவதும், இவை அனைத்தும் அறிவுக்கும் பொருந்தாத செயல். அல்லாஹ்வின் மார்க்கத்திலும் இல்லாத செயல்.

குடி இருக்கும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சரிதான். சுத்தத்தை நாம் நாள் தோறும் கடைப்பிடிக் வேண்டும் என்பதை மனதில் வைத்து, ஒடுக்கத்து புதன் அன்று மட்டும் அல்லாமல் ஈமானின் கிளையான தூய்மையை வாழ்வில் என்றும் நிலைநிறுத்தினால் வீட்டிற்கும்,  வீட்டில் உள்ள மனிதர்களுக்கும் மிக்க நல்லது. ஆனால் அதை ஒடுக்கத்துப் புதனுக்காக மட்டும் செய்வது மூடப் பழக்கம்.

ஒடுக்கத்துப் புதனை கொடிய நகசு, அதாவது கெட்ட நாள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவதாக சில அண்டப் புளுகர்கள் அரபுத் தமிழ் நூல்களில் எழுதி வைத்திருக்கின்றனர். காலத்தை ஏசுபவர்கள் பற்றி அதாவது நல்ல காலம், கெட்ட காலம் என்று எண்ணுபவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”என்னை ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசியவனாக என்னை நோவினை படுத்துகிறான். (காரணம்) நானே காலமாக உள்ளேன். என் கையில் தான் அதிகாரம் உண்டு. நானே இரவு-பகலை மாற்றுகிறேன்” என கூறினார்கள். இதை அபுஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது). திருமறை குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. முழுக் குர்ஆனையும் படித்துப் பாருங்கள். குர்ஆனின் ஒரு இடத்தில் கூட ஒடுக்கத்துப் புதனைப் பற்றி குறிப்பிடப்படவேயில்லை. புதன் கிழமை என்னும் வார்த்தைக் கூட இல்லை.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். “அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன், இவர்களை விட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள். நிச்சயமாக வெற்றி அடைய மாட்டார்கள். (அல் குர்ஆன் 10 : 17)

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!