சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 18ம் படியை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு மட்டுமே இதில் ஏற அனுமதி உண்டு.
சபரிமலை தந்திரிகள், மேல்சாந்தி மற்றும் பந்தளம் மன்னர் பிரதிநிதிகள் ஆகியோருக்கு மட்டுமே இருமுடி இல்லாமல் 18ம் படியில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அனுமதி உண்டு. புனிதமான 18ம் படியில் வயதான பக்தர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வரும்போது அவர்களை ஏற்றி விடுவதற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் படியில் அமர்வதற்கோ, பின்புறமாக திரும்பி நிற்பதற்கோ அனுமதி கிடையாது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது பணிக்காலம் முடிந்து திரும்பிய 30க்கும் மேற்பட்ட போலீசார் 18ம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்த விவகாரம் கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் போலீசாரின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் 18ம்படி முன் நின்று கொண்டு குரூப் போட்டோ எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே சபரிமலை பணி முடிந்து விடுமுறையில் சென்ற இந்த போலீசாரை உடனடியாக பணிக்குத் திரும்ப ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டார். பத்தனம்திட்டா ஆயுதப்படை முகாமைச் சேர்ந்த 23 பேருக்கு கண்ணூர் ஆயுதப்படை முகாமில் நன்னடத்தை பயிற்சி அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் போலீசாரின் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. சபரிமலையில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் சிலரது நடவடிக்கையால் கேரள போலீஸ் துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.