மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதி, மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மருத்துவக்கல்லூரி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என மதுரை மாநகர் காவல்துறை கீழ்க்கண்டவாறு அறிவித்துள்ளது. அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை வழியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணி சார்ந்த அரசு அலுவலர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர்.

.அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி முகவர்கள் மற்றும் தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் தமுக்கம் மைதான சாலை மற்றும் டாக்டர். தங்கராஜ் சாலை வழியாக மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்படி 3 சாலைகள் வழியாக செல்வோர் தங்களது வாகனங்களை காவல்துறையால் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் ஆகியோர் தமுக்கம் சாலை, தங்கராஜ் சாலை மற்றும் சட்ட கல்லூரிக்கு எதிரே உள்ள சாலை ஆகிய சாலைகளின் வழியாக வந்து, தமுக்கம் மைதானம் வாகன நிறுத்தத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மற்றும் அதனை சார்ந்த அலுவலில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் திருவள்ளுவர் சிலை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வழியாக வந்து வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மருத்துவக்கல்லூரி காம்பவுண்டு சுவரை ஒட்டியுள்ள அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாளை 23.05.2019-ந் தேதியன்று காலை 06.00 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மேற்படி 3 சாலைகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மதுரை மாநகர் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்


You must be logged in to post a comment.