வாக்குரிமை நமது ஜனநாயக உரிமையாகும்… ஓட்டுரிமையை தடுப்பதும்… ஓட்டை விற்பதும் குற்ற செயலாகும்…

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் மற்றும் மநீம போன்ற கட்சிகள் தனித்தும் களம் காணுகின்றன.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மத்திய மாநில ஆளும் கட்சிகளை விமர்சித்து எதிர்கட்சிகளும், எதிர்கட்சிகளை விமர்சித்து ஆளும் கட்சிகளும் தொடர் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன.

முன்பெல்லாம் தேர்தல் களத்தில் ஆண்ட கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கை குறித்தும் மக்களின் நிகழ்கால சிரமங்கள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்துமே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தன.

இன்றைய தேர்தலில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் ஒருவருக்கொருவர் சேற்றை வாரி இரைப்பதும், அவதூறுகளை மீம்ஸ்களாகவும், சமூக வலை தளங்களின் வாயிலாகவும் பரப்பி வருவதும் அதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கி அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பது வேதனையை தருகிறது.

ஜனநாயக நாட்டில் ஜனநாயக அடிப்படையில் வாக்கு சேகரிக்கவும், பிரச்சாரம் செய்யவும் அனைத்து கட்சிகளுக்கும் முழு உரிமை உண்டு. நமக்கு ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ பிடிக்கவில்லை என்றால் நமது எதிர்ப்பினை ஓட்டு சீட்டின் மூலம் பதிவு செய்வதே அறிவார்ந்த செயலாகும்.

ஒரு கட்சி அல்லது கூட்டணி நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை வாக்கு சேகரிக்கவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ விடாமல் முற்றுகையிட்டு இது எங்கள் ஏரியா உள்ளே வராதேனு கோஷம் போடுவது ஏற்புடையதல்ல.

ஒவ்வொரு கட்சிக்கும் சில இடங்களில் தனிப்பட்ட முறையில் கூடுதல் ஆதரவாளர்கள் இருக்கலாம்? அதற்காக அந்தந்த பகுதிகளில் தனக்கு பிடிக்காத கட்சிக்காரர்களின் பிரச்சாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் ஜனநாயகம் அனுமதிக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமைதியாக போய்க்கொண்டிருக்கும் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் ஆங்காங்கே சில பகுதிகளில் குறிப்பிட்ட சில கட்சிகளின் வேட்பாளர்களின் பிரச்சாரத்தை எதிர்ப்பதும், அவர்களை வாக்கு சேகரிக்க விடாமல் துரத்துவதும் ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

வாக்குரிமை எப்படி நமது ஜனநாயக உரிமையோ? அதேபோன்று வாக்கு சேகரித்தலும் ஜனநாயக உரிமை என்பதை உள்வாங்கி ஒவ்வொரு கட்சி தொண்டர்களும் தங்களின் வெற்றிக்கான அறிவார்ந்த வகையில் செயல்பட வேண்டுமேயொழிய பிற கட்சிகளின் பிரச்சாரத்தை தடுக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல.

ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலை எவர் செய்தாலும் காவல்துறையும்,அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற உறுதி செய்திட வேண்டுமென்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள  அனைவருடைய  கோரிக்கையாகும்.

ஆக்கம்:- கீழை ஜஹாங்கீர் அரூஸி Ex.Mc

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!