ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸின் பதவிக்காலம் வரும் 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. எனவே, யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா என்ற விவரங்களை பார்க்கலாம்.
26வது ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்க உள்ளார். இவர் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) கணினி அறிவியலில் பொறியியல் பட்டதாரியான மல்ஹோத்ரா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றும் மல்ஹோத்ரா, நிதி, வரிவிதிப்பு, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 33 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டு வருகிறார்.
மாநில மற்றும் மத்திய அரசின் நிதி மற்றும் வரி விதிப்பு துறை ஆகியவற்றில் அனுபவம் பெற்றவர். நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கான வரிக் கொள்கையை வகுப்பதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பை நிர்வகிப்பதற்கான பொறுப்பான அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மல்ஹோத்ரா முன்னாள் செயலாளராகவும் பணியாற்றினார்.
உர்ஜித் படேல் ராஜானா செய்த பிறகு, டிசம்பர் 12, 2018 அன்று ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக தற்போது உள்ள சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2021ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளில் கோவிட்-19, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் நடந்த போர்கள் உட்பட பல சவால்களை தாஸ் கையாண்டுள்ளார். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தின் சாமர்த்தியமான வழிசெலுத்தலுக்காக, உலகளாவிய மன்றங்களில் இரண்டு முறை தொடர்ச்சியாக இந்த ஆண்டின் மத்திய வங்கியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், இவரது பதவிக்காலாம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி முடிவடைகிறது. இவரது பதவிக்காலத்தை நீடிக்காமல், ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமித்துள்ளது.
You must be logged in to post a comment.