கச்சத்தீவு திருவிழா பயணம்: உயர் நீதிமன்ற ஆணையை செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை..

இராமநாதபுரம், ஜன.7 – வரும் பிப்ரவரி 23, 24 ல் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழா பயணத்திற்கு மீன்பிடி விசைப்படகில் அழைத்து செல்லக் கூடாது என்ற உயர் நீதிமன்ற ஆணையை செயல்படுத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23 ,24ல் நடைபெற உள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின் படி திருப்பயண திட்டத்தை மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகள் நடப்பாண்டு செயல்படுத்த வேண்டுமென, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி கோரிக்கை விடுத்தார். ஹஜ் திருப்பயணம், ஜெருசலேம் திருப்பயணம் போன்றவற்றிற்கு அரசு மானிய நிதி வழங்கி ஊக்கப்படுத்துகிறது. அதுபோல, கச்சத்தீவு ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய-இலங்கை மக்களின் நல்லெண்ண அடையாளமாக கச்சத்தீவு திருவிழா நடைபெறுகிறது. கச்சத்தீவு பாரம்பரிய திருப்பயணம் செல்லும் படகுகளுக்கு தமிழக அரசு பங்களிப்பாக 100 லிட்டர் டீசல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பு கூட்டத்தை கடந்த காலங்களைப் போல் காலம் தாழ்த்தாமல் முன் கூட்டியே நடத்தி பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கச்சத்தீவு திருவிழா தொடர்பாக உயர்நீதிமன்ற ஆணைப்படி பாரம்பரிய மீனவர்கள் தங்கள் நாட்டுப்படகில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை அழைத்து செல்ல உரிய ஏற்பாடு செய்து தரவேண்டும். கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பயணிகளை மீன்பிடி விசைப்படகில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கச்சத்தீவு திருவிழா பயணிகளை, அரசு ஏற்பாடு செயயும் பயணிகள் கப்பல்களில் அழைத்து செல்லவேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மத்திய, மாநில அரசுகள் நடப்பாண்டில் முற்றிலும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் பாரம்பரிய மீனவ சங்க தலைவர்கள் ராயப்பன், கெம்பீஸ், ஜெரோமியாஸ், ஜான்பிரிட்டோ, காளிதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!