இராமநாதபுரம், அக்.31-
பரமக்குடி அருகே பிரசித்தி பெற்ற நயினார்கோவில் நாகநாத சுவாமி வாசுகி தீர்த்த குளத்தை தூர்வாரக் கோரி தீர்த்த பாதுகாப்பு சங்கத்தினர் வலியுதுத்தி உள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகள் பெற்ற இக்கோயில் முன் வாசுகி தீர்த்த குளம் உள்ளது. கோயிலுக்கு பரிகாரம் தேடி வருவோர் குளத்தில் நீராடிய பின் சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். குளத்தில் கழிவு நீர் கலந்து காணப்படுகிறது. திருநாகேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக பரிகார ஸ்தலமாக விளங்கும் இங்கு தீர்த்த குளத்தை சீரமைக்க வேண்டும். வைகை மேல நாட்டார் கால்வாயில் இருந்து வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம, வட்ட கணக்குகள், நில அளவை பதிவேடுகளில் கால்வாய் உள்ளது என சங்கம் சார்பில் நிறைவேற்றிய தீர்மான நகல் உள்ளிட்ட ஆவணங்களை தாசில்தார் ரவியிடம் நயினார்கோவில் நாகநாதர் தெப்ப வாசுகி தீர்த்த பாதுகாப்பு சங்கத் தலைவர் துரைப்பாண்டி, செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, தலைமை ஆலோசனை குழு உறுப்பினர்கள் மதுரை வீரன், மலைச்சாமி வழங்கினர். தீர்த்த குளத்தை தூர்வார பரமக்குடி சார் ஆட்சியர், பொதுப்பணித்துறை, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டவருக்கு தபால் அனுப்பி உள்ளனர்.


You must be logged in to post a comment.