வளர்ச்சித் திட்டப் பணிகளை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல் படுத்துவதை கைவிட வேண்டும் என ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஊரக வளர்ச்சி பணிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களிடம்
தெரியப்படுத்தாமல் அரசு அதிகாரிகளே தன்னிச்சையாக செயல்படுத்தி வருகின்றனர்.இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக அமைகிறது. இத்தகைய செயல்பாடுகளால் பல்வேறு குளறுபடிகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், 15வது நிதிக்குழு மானியம், ஜல் ஜீவன் மிஷன் (குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம்) உள்ளிட்ட மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் ஊராட்சிக்குட்பட்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள்.இத்திட்டங்களை கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தாமல் பேக்கேஜ் டெண்டர் விடும் முறையை கைவிட வேண்டும்.கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு பஞ்சாயத்ராஜ் சட்டம் வழங்கிய அதிகாரத்தில் எவ்வித குறுக்கீடும் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே மக்களை நேரடியாக சந்திக்கின்றனர்.மக்களின் தேவைகளை நேரடியாக மக்கள் அவர்களிடமே தெரிவிக்கின்றனர்.உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாத தனி அலுவலர் காலத்தில் செயல்படுத்தப்பட்ட நடைமுறைகளையே உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்ற பின்னரும் கடைப்பிடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஊரக வளர்ச்சி பணிகளை அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதைகைவிட்டு,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.


You must be logged in to post a comment.