முதுகுளத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டம்: அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத்துறை மூலம் முதுகுளத்தூர் முதல் உத்தரகோசமங்கை வரை ரூ.4.35 கோடி மதிப்பில் 2.8 கிமீ நீளத்தில் இடைவெளி சாலையை 2 வழி சாலையாக அகலப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதை பார்வையிட்டு சாலையின் தடிமன், நீர் வாட்டம் குறித்து ஆய்வு செய்தார்.
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே திடல் ஊரணியில் கலைஞர் நகர்புறத் திட்டம் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 1.19 கோடி மதிப்பில் ஊரணி மேம்படுத்தும் பணி மற்றும் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். செல்வநாயகபுரத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2024-25 ன் கீழ் தஞ்சாவூர்-சாயல்குடி சாலை கிமீ 225/2 முதல் பருக்கைக்குடி செல்வநாயகபுரம் சாலை வரை ரூ.42.21 லட்சம் மதிப்பில் தார் சாலை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
தேரிருவேலியில் செயல்பட்டுவரும் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பொருட்களின் விவரம், பராமரிக்கப்படும் பதிவேடுகளின் விபரங்களை விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் நியாயவிலை பொருட்கள் சரியாக கிடைக்க வேண்டும் அறிவுறுத்தினார்.

சாம்பக்குளம் ஊராட்சி செயலர் அலுவலக கட்டடப் பணிகளை பார்வையிட்டு, சாம்பக்குளம் அங்கன்வாடி மைய குழந்தைகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குழந்தைகளின் வயது, உயரம், எடை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அரசின் மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் சரியான முறையில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!