விசைப்படகு கடலில் மூழ்கியதால் நீந்தி கச்சத்தீவில் கரையேறிய மண்டபம் மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த நல்லிக்குறிச்சி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பொன்னழகு (51), குமார் (40), கணேசன் (56),
முருகன் (30) ஆகிய மீனவர்கள் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (31ம் தேதி) மீன்பிடிக்கச் சென்றனர்.இவர்கள், ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து விட்டு, நள்ளிரவில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பாறை மீது விசைப்படகு மோதியது.இதில் படகில் உடைப்பு ஏற்பட்டதால் கடல் நீர் உள்ளே புகுந்தது. சற்று நேரத்தில் படகு கடலில் மூழ்கியது. தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரும், நீந்திச் சென்று கச்சத்தீவில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று (1ம் தேதி) காலை அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகு ஒன்று மூழ்கிய நிலையில் காணப்படவே அதன் அருகே வந்தனர்.அப்போது,
சோர்வுற்ற நிலையில் கச்சத்தீவில் தஞ்சம் அடைந்திருந்த 4 மீனவர்களைக் கண்டனர். இதையடுத்து அங்கு சென்ற கடற்படையினர், அவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வழங்கினர்.இதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்கள் 4 பேரையும் யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.மீனவர்களிடம் இலங்கை மீன்வளத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மீனவர்களின் உறவினர்கள் கூறுகையில், ‘‘கச்சத்தீவில் தஞ்சமடைந்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேர் மீதும் இலங்கை அரசு வழக்குப்பதிவு செய்யக்கூடாது. மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









