தமிழக அரசியல் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் பிரேமலதா கணிப்பு

 பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலில் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.தேமுதிக., தலைவர் விஜயகாந்த் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்தார். புரோகிதர் சாமிநாத சர்மா வீட்டில் நடந்த தில ஹோமம் மற்றும் ராகு – கேது பெயர்ச்சி சிறப்பு யாகத்தில் பங்கேற்று வழிபாடு செய்தார். 30 புரோகிதர்களுடன் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த சிறப்பு யாகத்திற்கு பின் கார் மூலம் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் ஆகியோர் அக்னி தீர்த்த கடற்கரை சென்றனர். அங்கு புரோகிதர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தை காரில் இருந்தவாறே விஜயகாந்த், அவரது குடும்பத்தினர் தெளித்துக்கொண்டனர். மாலையில் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, விநாயகர், முருகன் சன்னதிகளில் தரிசனம் செய்தனர். பின்னர், பிரேமலதா கூறுகையில், எங்கள் மேலாளரின் திருமணத்திற்காக ராமநாதபுரம் வந்தோம். அப்படியே ராகு – கேது பெயர்ச்சி நாளில் ராமேஸ்வரம் கோயில் திறக்கப்பட்டதால் குடும்பத்துடன் தரிசனம் செய்துவிட்டு செல்லலாம் என வந்தோம். தரிசனம் செய்த மன நிறைவுடன் சென்னை செல்கிறோம். தொண்டர்களின் விருப்பம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே. ஆனால், தை மாதத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி விஜயகாந்த் நல்ல முடிவை அறிவிப்பார். எப்போதும் தனித்து போட்டியிட்டு களம் கண்ட இயக்கம் தேமுதிக., அதன் பின்னர் கூட்டணிக்குச் சென்றிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு. அதுவரை பொறுத்திருந்து பாருங்கள். அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அரசியலை பொறுத்தமட்டில் நாளை என்பது கூட ரொம்ப தூரம் எனச் சொல்லப்படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. 2021 மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகும் ஆண்டாகும். இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும். அதிமுக., உள்ளிட்ட பல கட்சிகளிலும் உட்கட்சி பூசல் இருக்கு. இந்நிலையில், மக்கள் எடுக்கும் முடிவே ஆட்சியை தீர்மானிக்கும். நிறை, குறை கலந்த ஆட்சியாக அதிமுக., ஆட்சி உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் ஸ்டாலின் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். ரஜினி, கட்சி ஆரம்பித்தபின்புதான் அவருடன் கூட்டணியா என்பது குறித்து கருத்து சொல்ல முடியும் என்றார். தேமுதிக., மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா, மண்டபம் ஒன்றிய செயலர் திலீப்காந்த், ராமேஸ்வரம் நகர் செயலர் முத்து காமாட்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!